Published : 30 Nov 2017 12:53 PM
Last Updated : 30 Nov 2017 12:53 PM

அரசுப் பேருந்தில் பயணித்த கடலூர் ஆட்சியர்: அதிகாரிகளையும் உடன் அழைத்துச்சென்றார்

மனு நீதி நாளில் மக்களை சந்திக்க தனது அதிகாரிகளையும் உடன் அழைத்துக்கொண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.

கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் அருகே இன்று (வியாழக்கிழமை) மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவார்கள். இதில் உடனடியாக தீர்க்கப்படும் விஷயங்களுக்கு ஆட்சியர் உடனே உத்தரவு பிறப்பிப்பார். இதன் மூலம் நாட்பட்ட பிரச்சனைகள் ஆட்சியரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இந்த மனு நீதி முகாமில் 1.46 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இன்று நடக்கும் மனுநீதி நாள் முகாமில் பங்கேற்க கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே தனது அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

செலவை குறைக்கும் நோக்கத்தில் கிராமத்திற்கு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே மற்றும் அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்த விஷயம் அறிந்த செய்தியாளர்கள் அதிகாரிகள் என்றால் அரசு காரில் தான் பயணம் செய்வார்கள், ஆனால் ஆட்சியரே பேருந்தில் பயணம் செய்வதும், உடன் அதிகாரிகளையும் அழைத்துச்செல்வதையும் என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே கூறியதாவது:

“அதிகாரிகள் காரில் பயணம் செய்வதை தவறு என்று கூற முடியாது. அவர்கள் மக்கள் பணிக்காக அவசர தேவைக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இன்று நாங்கள் செல்வது ஒரு கிராமத்திற்கு.

இங்கு அனைவரும் ஆளாளுக்கு ஒரு காரில் செல்லும் போது தேவையற்ற போக்குவரத்து நெரிசல், மக்களுக்கும் இடையூறு. டீசல் செலவும் ஆகும். நாங்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு மக்கள் குறை கேட்க செல்லுகிறோம். இது போன்று ஒரே பேருந்தில் செல்லும் போது அனைவரும் இதில் ஒன்று பட்ட கருத்துள்ளவர்களாக செல்ல வாய்ப்பு உள்ளது.

நாங்கள் இது போன்று ஒரே பேருந்தில் சாதாரணமாக சென்று மக்களை சந்திக்கும் போது மக்களும் எங்களை நெருங்கி வந்து அவர்கள் குறைகளைச் சொல்ல வாய்ப்பு உண்டு.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் பிரசாந்த் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பலமுறை மக்களோடு மக்களாக பேருந்தில் பல முறை பயணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று விருது நகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானமும் பேருந்தில் பயணம் செய்தவர். சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்க்க அவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x