Published : 15 Nov 2017 11:30 AM
Last Updated : 15 Nov 2017 11:30 AM

சட்டங்களை சரியாக அமல்படுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது: பெண் இன்ஜினீயர் கொலை குறித்து கனிமொழி கருத்து

அதிகரித்து வரும் ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்கவும் பெண்கள் மனதிலும் அவர்களின் குடும்பத்தாரின் மனதிலும் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும்,  சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த மூன்று மாதங்களில் இது நான்காவது சம்பவம். ஒருதலைக் காதல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டில் நடந்த ஸ்வாதி கொலையில் ஆரம்பித்து, இப்போது நடந்துள்ள இந்துஜா கொலை வரை பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஒரு பிரச்சினை வரும்போது மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு வரவேண்டும்.

பெண்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களைப் பின்தொடரும் ஆண்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை சரியாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை.

'விஷயம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது' என்ற பயத்தில் இதுபோன்ற விஷயங்களைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் மறைப்பது இப்படி உயிர்ச் சேதத்தில் முடிகிறது.

அதிகரித்துவரும் ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்கவும் பெண்கள் மனதிலும் அவர்களின் குடும்பத்தாரின் மனதிலும் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும் இது தொடர்பாக உள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x