Published : 03 Nov 2017 09:15 AM
Last Updated : 03 Nov 2017 09:15 AM

தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி அனுமதிக்கு ஒற்றை சாளர முறை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முறையை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்குவதை எளிமையாக்க, ஒருங்கிணைந்த இணைய வழி ஒற்றைச்சாளர தகவு (சிங்கிள் விண்டோ போர்ட்டல்) தொழில் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் , நகர மற்றும் ஊரமைப்பு திட்டமிடல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் மற்றும் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உள்ளிட்ட 11 அரசுத் துறைகளின் மூலம் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு அனு மதிகள் வழங்கல், புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெற முடியும்.

இதன் மூலம் நேரடி மனித தொடர்பின்றி பல்வேறு அரசுத் துறைகளின் 37 சேவைகளை முதலீட்டாளர்கள் இணையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். முதலீட்டாளர்கள் இதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தவும் இயலும். குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் அறிவிப்புகள் மூலம் விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் முடியும். இறுதி ஒப்புதல்களை மனுதாரர்கள் இதன் மூலமே பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு அனு மதியை பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்வதன் மூலம் ஒற்றைச் சாளர முறையை வலுப்படுத்த தமிழக அரசு, சமீபத்தில் அவசர சட்டம் மூலம் விதிகளை கொண்டுவந்துள்ளது. இவற்றில், தொழில்துறைக்குத் தேவையான அனுமதிகளை அரசுத் துறைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உரியகாலத்தில் அனுமதி வழங்கப்படுவதை கண்காணிக்க உயர்நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாக செயல்படவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகள் கொண்ட https://www.easybusiness.tn.gov.in என்ற இந்த ஒற்றைச் சாளர தகவை, முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பி.பெஞ்சமின், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x