Last Updated : 06 Nov, 2017 11:52 AM

 

Published : 06 Nov 2017 11:52 AM
Last Updated : 06 Nov 2017 11:52 AM

கோவை மாநகராட்சியின் பல பகுதிகளில் விளம்பர வருவாய்க்காக நிறுவப்படுகிறதா நிழற்குடைகள்? - கட்டுப்படுத்துவது யார் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்

வாகன ஓட்டிகளை திசைதிருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் சிக்னல்களில் விளம்பரங்கள் வைக்க கடந்த வாரம் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், கோவையிலோ சிக்னல்களிலும், அதைவிட பலமடங்காக நிழற்குடைகளிலும் விளம்பரங்களே ஒளிர்கின்றன. வருவாய்க்காகவே தேவையற்ற பகுதியிலும் நிழற்குடைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

நாளுக்குநாள் பெருகி வரும் விபத்துகளைக் கட்டுப்படுத்த ஒருபுறம் புதிய போக்குவரத்து வழிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. மறுபுறம் வருவாய்க்காக அந்த வழிமுறைகள் மீறப்படுகின்றன. அதற்கு மிகச்சரியான உதாரணம் கோவையில் ஆங்காங்கே முளைத்து நிற்கும் நிழற்குடைகள். மழைக்கும், வெயிலுக்கும் பயன்படாத வடிவம் என விமர்சிக்கப்பட்டு வரும் இந்த நவீன நிழற்குடைகள் இப்போது நகரமெங்கும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. பேருந்துகளே நிற்காத இடத்தில்கூட நிழற்குடைகள் காத்திருக்கின்றன. இதில் என்ன லாபம் இருக்கப் போகிறது என்றால், விளம்பரங்களால் வரும் வருமானமே காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

என்ன செய்கிறது சாலைப் பாதுகாப்பு கமிட்டி?

2009-ம் ஆண்டு வரை, ஒரு இடத்தில் நிழற்குடை வேண்டுமா, வேண்டாமா என்பதை போக்குவரத்துத்துறை, போக்குவரத்துக்கழகத்தினர் ஆய்வு செய்து அமைத்து வந்தார்கள். 2010-லிருந்து புதிய நடைமுறைப்படி மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி அனுமதியோடு நிழற்குடைகளை மாநகராட்சி அமைக்கலாம்; டெண்டர் விட்டு விளம்பர வருவாயை எடுத்துக் கொள்ளலாம் என்பது போன்ற நடைமுறைகள் வந்தன. அதன் பிறகே பிரச்சினைகளும் வந்தன. டெண்டர் எடுத்தவர்கள் தாங்கள் நினைக்கும் இடத்திலெல்லாம் நிழற்குடைகளை அமைத்தார்கள். ஒரு நிழற்குடை இருக்க வேண்டிய இடத்தில் பல அமைக்கப்பட்டன. இட நெருக்கடி, போக்குவரத்து பிரச்சினை, விளம்பரங்களால் ஏற்படும் இடையூறுகள் என தொடங்கிய பிரச்சினைகளுக்கு இன்று வரை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இப்பிரச்சினையை சாலைப் பாதுகாப்பு கமிட்டியும் கண்டுகொள்ளாமல் விட்டதால் விதிமீறல்கள் வீரியமாக பெருகிக் கொண்டிருக்கின்றன.

நடவடிக்கையில் இறங்குவாரா ஆட்சியர்?

கோவை நகரில் உள்ள ஒவ்வொரு நிறுத்தங்களிலும் ஒன்றுக்கு பல நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் இணைப்புப் பகுதிகளிலோ, புதிய புதிய இடங்களில் நிழற்குடைகளை அமைத்துள்ளனர். பேருந்துகள்கூட நிற்காத புதிய நிழற்குடைகள் வெறுமனே விளம்பரத்துக்கான தளமாக மாறி வருகிறது. நிழற்குடைகளின் பராமரிப்புச் செலவுக்காக விளம்பரங்கள் அமைப்பது என்ற நோக்கம் மாறி, விளம்பரங்களை ஒளிரவிட நிழற்குடைகளை நிறுவுவது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு கமிட்டி தலைவரான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விளம்பரங்களுக்காக நிறுவப்படும் நிழற்குடைகளைக் கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் விபத்துகளையும், இன்னபிற பிரச்சினைகளையும் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தொடர் நடவடிக்கை தேவை

கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் கூறும்போது, ‘2010-லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய திட்டம் ஆரம்பத்தில் நல்லவிதமாக இருந்தது. நிழற்குடைகளை அமைத்து பராமரிக்கும் வேலை 3 ஆண்டுகளுக்கு மட்டும் தனியாருக்கு டெண்டர் மூலமாக ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், மிக விரைவிலேயே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. டெண்டர் எடுத்தவர்கள் தங்கள் விருப்பம்போல நிழற்குடைகளை நிறுவத் தொடங்கினர். அதன் பிறகு எழுந்த புகார்களின் அடிப்படையில் ஆட்சியர்களாக இருந்த உமாநாத், கருணாகரன், அர்ச்சனா பட்நாயக் மூவருமே நிழற்குடை அமைப்பில் விதிமுறைகள் உள்ளதை சுட்டிக்காட்டி கடிதங்களை எழுதினர். அனுமதி பெறாதவற்றை உடனே நீக்க வேண்டுமென்பதையும், சாலைப் பாதுகாப்பு கமிட்டி பல முறை அறிவுறுத்தியது.

அர்ச்சனா பட்நாயக் ஆட்சியராக இருந்தபோது புதிய நிழற்குடைகளுக்கு அனுமதி கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில்தான் கோவையில் உள்ள நிழற்குடை குறித்து போக்குவரத்துத் துறை விரிவான ஆய்வு நடத்தியது. அதன் பிறகு, நிழற்குடை, சிக்னல் விளக்குகள் உள்ளிட்டவற்றில் விளம்பரங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென பலவாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகமே உறுதியான தொடர் நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்றார்.

அகற்ற வேண்டியவை ஏராளம்

போக்குவரத்துத்துறையினர் கூறும்போது, ‘2013-ல் கோவை நகரில் சுமார் 160 நிழற்குடைகள் சாலை பாதுகாப்பு கமிட்டி அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக அப்போதைய ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எங்கு தேவை, தேவையில்லை என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்வது நடைமுறையில் இல்லை. அதனால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் உள்ளது. தற்போதும்கூட கூடுதலாக 50 நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை இன்னும் இயக்கத்துக்கு வரவில்லை’ என்றனர்.

கோவை மாநகராட்சியின் பல பகுதிகளில் புதிதாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் அனுமதி பெற்றவையா, போக்குவரத்து, அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா, ஒட்டுமொத்தமாக கோவையில் உள்ள நிழற்குடைகள் எவ்வளவு என்ற எந்த கேள்விகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பதில் இல்லை.

அதிகாரிகளுக்கு மட்டும் கூட்டம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் கேட்டபோது, ‘நிழற்குடைகளுக்கு மாநகராட்சியே அனுமதி கொடுக்கிறது. கோவையில் ஒரு புதிய நிழற்குடைக்குகூட நான் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இதில் விதிமீறல்கள் இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் தரப்பில் மட்டும் சாலைப் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

பயணிகளை ஆசுவாசப்படுத்தும் இடங்களே நிழற்குடை. அது ஆதாயம் தேடும் இடமாக மாறக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x