Published : 29 Jul 2023 02:15 PM
Last Updated : 29 Jul 2023 02:15 PM

“பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை!” - அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ராமேசுவரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தைத் தொடங்கிவைத்து, திமுகவையும் திமுக அரசையும் சாடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "திமுக இளைஞரணி கூட்டத்துக்கு வந்ததால் இளமையாக உணர்கிறேன். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை பார்க்கும்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு வயசு 70. ஆனால், இங்கே 20 மாதிரி நிற்கிறேன்.

234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்தியது உதயநிதியின் சாதனை. கடந்த 2 ஆண்டுகளாக, திமுகவை நோக்கி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. மாணவர்கள், இளைஞர்களிடம் திமுக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றை இளைஞர்களுக்கு சொல்லித்தர வேண்டும். திராவிட இயக்க வரலாறு மற்றும் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் வாரிசுகள் உருவாக வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒற்றைச் செங்கலை காட்டி பரப்புரை செய்தவர் உதயநிதி. உதயநிதி மேற்கொண்ட செங்கல் பிரசாரத்தை எதிர்கட்சிகளே மறக்கவில்லை. சேப்பாக்கம் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் அதிக பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி. 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தை நடத்தி காட்டினார் உதயநிதி. நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிராக உதயநிதியும், திமுக இளைஞரணியினரும் போராட்டம் நடத்தினர். கட்சிப் பணியிலும், ஆட்சி பணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி.

இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இளைஞரணி செயலாளராக உதயநிதி பல்வேறு சாதனையை செய்து வருகிறார். இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து திமுகவை உதயநிதி பலப்படுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் சுற்றி சுழன்று பணியாற்றினார் உதயநிதி. கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி. திமுக இளைஞரணி தீர்மானங்களை பார்க்கும்போது மிகுந்த நிம்மதி அடைகிறேன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகனின் நிழற்குடையில் அவர்களின் கருத்தியல் அடையாளமாக நிற்கிறேன். திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லவே ‘இந்தியா’ கூட்டணி. இந்தியா என்ற பெயரைக கேட்டால், சிலர் பதறுகிறார்கள். எங்கு சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி.

பாத யாத்திரையை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழக வந்தார். பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல. குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்தவைக்கும், தற்போது மணிப்பூரில் நடந்துகொண்டு இருப்பதற்கும் மன்னிப்புக் கேட்கும் பாவ யாத்திரை. 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்னை குறித்து பேச உரிமை உள்ளதா?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசியுள்ளார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள், இது குறித்து பிரதமரிடம் அமித் ஷா கேட்பாரா? பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத் துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடியப் போகிறது. மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் சில மாதங்கள்தான். இந்தியாவுக்கு விடியல் பிறக்கப் போகிறது. இந்தியாவை காப்பாற்ற I.N.D.I.A-வுக்கு வாக்களியுங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அமித் ஷா பேசியது என்ன? - முன்னதாக, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை, ராமேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசும்போது, “ தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கவும், ஊழலில் இருந்து தமிழகத்தை விடுவிக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும்தான் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத் திட்டங்களை இந்த பயணம் மீண்டும் கொண்டுவரும்.

திமுகவும், காங்கிரஸும் மக்களிடம் வாக்கு கேட்கப் போகும்போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள்தான் நினைவுக்கு வரும். இலங்கையில் தமிழர்களை அழிக்க காரணமாக இருந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி. உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். இக்கூட்டணி தலைவர்கள் தங்கள் மகன், மகள், மருமகனைத்தான் வளப்படுத்த நினைக்கின்றனர்.

உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக இது உள்ளது. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கினால், அவர்எல்லா ரகசியத்தையும் வெளியே சொல்லிவிடுவார். இதனால்தான் ராஜினாமா கடிதத்தை வாங்காமல் உள்ளனர். தமிழக மின் பகிர்மானக் கழகத்திலும் இந்த அரசு ஊழல் செய்துள்ளது.

10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? நான் அந்தக் கணக்கைத் தருகிறேன். அவர்களைவிட பாஜக 3 மடங்கு உயர்த்தித் தந்துள்ளது. சாலை அபிவிருத்திக்காக ரூ.45 ஆயிரம் கோடி, சென்னை மெட்ரோவுக்காக ரூ.73 ஆயிரம் கோடி, பிற ரயில்வே பணிகளுக்காக ரூ.34 ஆயிரம் கோடி தந்துள்ளோம்.

86 லட்சம் பேருக்கு நேரடி குடிநீர் இணைப்பு, 1.86 கோடி பேர் இலவச மருத்துவ சேவைத் திட்டத்தில் இணைப்பு, 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி, 1.10 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச அரிசி, 15 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அண்ணாமலை ஒரு ட்விட் போட்டால் திமுக ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. இந்த நடைபயணம் முடியும்போது தமிழகத்தில் மாற்றம் நடக்கும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிக எம்.பி.க்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x