Published : 29 Jul 2023 05:14 AM
Last Updated : 29 Jul 2023 05:14 AM

ராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலாம் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிடுகிறார் அமித் ஷா

ராமேசுவரம்: ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பிலான ஆங்கிலப் பதிப்பு நூலை ராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

நசீமா மரைக்காயர் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயரின் மகள். ஒய்.எஸ்.ராஜன், அப்துல் கலாமுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியவர். நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர். இவர்கள் இருவரும், கலாமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இந்தப் புத்தகத்தில் கூடுதல் தகவல்கள் உள்ளன.

இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை சென்னை ஆளுநர் மாளிகையில் (2021 ஜனவரி) அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். தற்போது ‘Dr. Apj Abdul Kalam: Memories Never Die’ என்ற ஆங்கிலப் பதிப்பை இன்று (ஜூலை 29) ராமேசுவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவெளியிடுகிறார். இந்தப் புத்தகத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன் மொழிபெயர்த்துள்ளார்.

கோயிலில் தரிசனம்: முன்னதாக, இன்று அதிகாலைராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜையில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். தொடர்ந்து, நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பேக்கரும்பில் உள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாம்இல்லத்தில் உணவருந்தும் அமித் ஷா, பிற்பகல் ஒரு மணியளவில் பாம்பன் குந்துக்காலில் உள்ள விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மண்டபம் முகாம் ஹெலிபேடுக்கு வந்து, பிற்பகல் 2 மணியளவில் மதுரை விமான நிலையம் திரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x