Published : 21 Nov 2017 11:18 AM
Last Updated : 21 Nov 2017 11:18 AM

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தல்: வாழை இலை, பாக்குமட்டைகளுடன் விவசாயிகள் தர்ணா

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழை இலை, பாக்குமட்டை பொருட்களுடன் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, நிர்வாகிகள் ந.சக்திவேல், தீத்திபாளையம் பெரியசாமி, பாலகிருஷ்ணன், ஜீவானந்தம், மணி, மூர்த்தி, அருகம்பாளையம் குமாரசாமி, நடராஜன் உள்ளிட்டோர், பாக்குமட்டை, வாழை இலை ஆகியவற்றுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து, வாழை இலை, பாக்குமட்டைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

ஹோட்டல்கள், டீக் கடைகள் மற்றும் பெரும்பாலான கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்களைக் கட்டித் தரவும், இறைச்சியைக் கொண்டுசெல்லவும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சூடான டீ, காபி ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் ஊற்றிக் கொடுக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால், உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் தீங்கு ஏற்படுகிறது.

மேலும், மக்காத தன்மைகொண்ட பிளாஸ்டிக் கழிவுகள், வேளாண் நிலங்களிலும், நீர்வழிப் பாதைகள், கழிவுநீர்க் கால்வாய்களிலும் சேர்ந்து, தண்ணீர், கழிவு நீரோட்டத்தை தடுக்கின்றன. கழிவுநீர் தேங்குவதால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பயன்பாடு குறையவில்லை.

பெங்களூரு மாநகராட்சி மற்றும் கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிதும் குறைத்துள்ளனர். எனவே, தமிழகத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதுடன், அதன் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் இலை உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், பாரம்பரிய பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தியையும் ஊக்குவித்து, அதிக அளவில் இவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேணடும். இவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முடியும். மேலும், மக்கும் தன்மை கொண்ட இலை குப்பையை, வேளாண் நிலங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.

அரச இலை, தேக்கு இலை உள்ளிட்டவை மூலம் தயாரிக்கப்படும் தட்டுகளின் உபயோகத்தையும் அதிகரிக்க வேண்டும். தேநீர் கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்குப் பதிலாக, கண்ணாடி, சில்வர் டம்ளர்களையும், காகித கப்புகளையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். பிளாஸ்டிக் கவர்களுக்குப் பதிலாக, சணல் பை, துணிப் பை மற்றும் காகிதப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றின் கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x