Published : 24 Nov 2017 08:41 PM
Last Updated : 24 Nov 2017 08:41 PM

திரை உலக நாயகனாகட்டும் முதலில்; உலகநாயகன் பற்றி பின் யோசிக்கலாம்: ஹெச்.ராஜா

'திரை உலக நாயகனாகட்டும் முதலில். உலகநாயகன் பற்றி பின் யோசிக்கலாம் என்கிறீர்கள். அவருக்கு புரிய வேண்டுமே என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் கூறியுள்ளார்.

பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திரைத்துறையைச் சார்ந்த பலரும் அசோக்குமார் தற்கொலை குறித்தும், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கமல் மவுனம் காப்பது ஏன் என்ற தொனியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சாடினார். இது குறித்த தன் ட்விட்டர் பக்கத்தில், ''தன் துறைசார்ந்த துக்கம். தன்னை ஏற்றிவிட்ட துறையில் பெரும் துயரம். பகிர்ந்து கொள்ளா கொடூர அமைதி. திடீர் டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான்வேண்டும்'' என்று தமிழிசை கடந்த 22-ம் தேதி பதிவிட்டார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், ''திரை உலக நாயகனாகட்டும் முதலில். உலகநாயகன் பற்றி பின் யோசிக்கலாம் என்கிறீர்கள். அவருக்கு புரிய வேண்டுமே'' என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே கடந்த 22-ம் தேதியே கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், ''கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்'' என்று இரங்கல் தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் மாறி மாறி கமலை சாடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x