Published : 26 Jul 2023 10:45 PM
Last Updated : 26 Jul 2023 10:45 PM

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: மூன்று நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முதல் மூன்று நாட்களில் 36 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும், டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் முதல் மூன்று நாட்களில், இன்று (ஜூலை 26ம் தேதி) மாலை 6.00 மணி வரை 36,06,974 விண்ணப்பங்கள் இணையதளம் வழி பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு 34,350 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் இருக்கும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பம் பதிவு செய்ய தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு உதவி மையத்திலும் ஒரு தன்னார்வலர் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்வார்.

மீதமுள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் முகாம் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகத் தொடங்கும்.

அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இத்திட்டச்செயலாக்கம் குறித்து இன்று (26.07.2023) தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x