Published : 26 Jul 2023 09:30 PM
Last Updated : 26 Jul 2023 09:30 PM

சட்டப்பேரவை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் பதில்: ஐகோர்டில் அரசு தகவல்

கோப்புப்படம்

சென்னை: தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் கூறியுள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தன்னையும் இணைக்க கோரி, அதிமுக தலைமை கொறடா எஸ்.பி. வேலுமணியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சட்டப்பேரவை செயலாளரின் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், "சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டப்பேரவை நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்ளுக்கு பதில் அளிப்பது, அரசு 110 விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தவிர யூடியூப், ட்விட்டர், பேஃஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.

அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சட்டப்பேரவை நிகழ்வுகள் படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 6ம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 ஏப்ரல் 12ம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.இதுதவிர, பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் முக்கிய தலைவர்கள், எதிர்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளது.

சட்டப்பேரவைநிகழ்வுகளை நேரலை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு 44 லட்சத்து 65ஆயிரத்து 710 ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. நேரடி ஒளிபரப்புக்காக கண்ணாடி இழைக் கேபிள் அமைக்கும் நடைமுறையை தூர்தர்ஷன் துவங்கியது. இப்பணிகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருப்பதால், தற்போது சட்டப்பேரவைநிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது" என்று கூடுதல் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது எஸ்.பி. வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. கேள்வி நேரத்தின் போது கேட்கப்படும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள் பதில் அளிப்பதை மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவையில் சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்ற போதும், சட்டப்பேரவைநிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுவதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்குகளின் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x