Last Updated : 14 Nov, 2017 02:22 PM

 

Published : 14 Nov 2017 02:22 PM
Last Updated : 14 Nov 2017 02:22 PM

நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளைக் காப்போம்!

நவம்பர் 14: உலக நீரிழிவு நோய் நாள்

குழந்தைகள் தினம் இன்று. அதேசமயம் இன்றைய நாளை மற்றொரு தினமாகவும் உலகம் பதிவு செய்திருக்கிறது. அது... உலக நீரிழிவு நோய் தினம். இந்த சமயத்தில், குழந்தைகளையும் இந்த நீரிழிவு நோய் தாக்குகிறது என்கிற தகவல் அதிர்ச்சி  அளிக்கிறது.

குழந்தைகள் என்றாலே சுட்டித்தனமும் துள்ளியோடுகிற  விளையாட்டுத்தனமும் தான். விளையாட வேண்டிய வயதில் நோய்வாய்ப்பட்டு, முடங்கிப் போகும் நிலைக்கு பல குழந்தைகள் தள்ளப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் நாம் பார்க்கிறோம்.

குழந்தைகளை சிறு வயதிலேயே பாதிக்கும் நோய்களில் முக்கியமானது 'ஜுவினைல் டயபட்டிஸ்'. அது 'டைப் 1 டயபட்டிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.

மரபணு காரணமாக வரக்கூடிய நீரிழிவு நோய் பற்றி, 'தி இந்து' (தமிழ்) இணையதளம் சார்பில் ரக்ஷித் மருத்துவமனையின் நீரிழிவுப் பாதுகாப்பு துறைத் தலைவர் மோகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

''பொதுவாக டைப் 1 டயபட்டிஸ், குழந்தை பிறக்கும்போதே இருக்கக்கூடியது. இன்சுலின் அதிகம் சுரக்காததால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். இந்த வகை டயபட்டிஸ் மரபணு வழியாக வரக்கூடியது என்பதால், இதை முழுமையாக குணப்படுத்தும் மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

ஜுவினைல் டயபட்டிஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிறு வயது முதலே இன்சுலின் ஊசி சரியான இடைவெளியில் போட வேண்டும். பெற்றோர், குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் நவீன உணவு வகைகளான, துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு கேழ்வரகு, சாமை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை வழங்க வேண்டும். குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும்''.

இவ்வாறு மோகன் தெரிவித்தார்.

'ஜுவினைல் டயபட்டிஸ்' என்பது குணப்படுத்த முடியாத நோயாக இருந்தாலும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடையே இது குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். இது பிள்ளைகளின் மனநிலையை பாதிக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. சரியான முறையில் கவனித்து உணவளித்தால், உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தால் இது நோயே அல்ல.  அதை நிச்சயம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.  அது நம் கையில்தான் இருக்கிறது.

வளரும் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அதிகப்படுத்த வேண்டும். குறைகள் இல்லாமல் மனிதர்கள் இல்லை. அக்குறைகள் என்றும் மனிதனுக்குத் தடையாக இருக்கக் கூடாது. உலகில் சாதித்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு குறையுடன் வாழ்ந்தவர்களே.

நோய் நம்மைக் கட்டுப்படுத்தும் முன், நாம் நோயைக் கட்டுப்படுத்துவோம்! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x