Published : 24 Jul 2023 04:58 AM
Last Updated : 24 Jul 2023 04:58 AM

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு வருகை தரும் நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

தருமபுரி/சேலம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம் தொப்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றும் பணி தொடங்குகிறது.

தமிழகத்தில் மகளிருக்கு மாதந் தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் நலன் காக்க நிறைவேற்றிய திட்டங்களை போற்றும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக முதல் கட்டமாக ஒரு கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் கொண்ட டோக்கன்களை வழங்கினர்.

இந்நிலையில் இந்த திட்டத்துக் கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (24-ம் தேதி) முதல் விண்ணப்பங்களை பதிவேற்றும் பணி நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை இன்று தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றும் பணி தொடங்குகிறது.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வரும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தொப்பூரில் உள்ள முகாமுக்கு வருகிறார். காலை 9.30 மணி அளவில் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாலை வழியாக காமலாபுரம் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்முதல்வரின் வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் மேற்பார்வையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள், 6 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பி-க்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ட்ரோன்கள் பறக்க தடை: முதல்வர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று (24-ம் தேதி) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, விமான நிலையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் கார்மேகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பல்வந்த் சிங் வாகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x