Published : 24 Jul 2023 05:34 AM
Last Updated : 24 Jul 2023 05:34 AM

ஜி-20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழு மாநாடு: சென்னையில் இன்று தொடங்குகிறது

கோப்புப்படம்

சென்னை: ஜி-20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக் குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் இன்று (ஜூலை 24) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. 2023-ல் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதையொட்டி ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி கூட்டம் சென்னையில் இன்றும், நாளையும் (ஜூலை 24, 25) நடைபெறுகிறது.

5 அம்சங்கள்: இதுதொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் கமல் கிஷோர், சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பேரிடர் அபாய தணிப்பு குழுவின் முதல்இரு கட்ட கூட்டங்கள் காந்தி நகர் மற்றும் மும்பையில் நடத்தப்பட்டது. தற்போது இறுதிகட்ட கூட்டம் சென்னையில் நடை பெறுகிறது. இதில் துரித முன் னெச்சரிக்கை, பேரிடர்கால நிதி மேம்பாடு, கடல் பேரிடர்கால மீட்பு நடவடிக்கை, பேரிடர்கால மீட்புக்கான உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய 5 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அதுசார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ள இந்த கூட்டம் நல்வாய்ப்பாக அமையும். கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகத்தில் சோதனை முறையில் குறுஞ்செய்தி மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை வழங்கியது. அதன்படி

3.5 கோடி குறுஞ்செய்தி: பொதுமக்களுக்கு 3.5 கோடி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இதற்கு சிறந்த பலன் இருந்தது. தொடர்ந்து குஜராத்தில் சமீபத்தில் புயல் குறித்து அந்த மாநில மக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை அனுப்பி விபத்துகளை தவிர்த்தோம். மேலும், தமிழகத்தில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு வெள்ள மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x