Published : 04 Nov 2017 08:35 PM
Last Updated : 04 Nov 2017 08:35 PM

வேலூர், திருவண்ணாமலை பகுதியில் முதல்மழை: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

முதல்முறையாக வேலூர் , திருவண்ணாமலை பகுதியில் முதல்மழை பெய்ய உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஆனால், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெரிதாக மழை பெய்யவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

''வடகிழக்கு பருவமழை வலுத்து வருகிறது. பருவமழை தொடங்கியபின், முதல்முறையாக வேலூர் , திருவண்ணாமலை பகுதியில் முதல்மழை பெய்ய உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மிகப்பெரிய அளவுக்கு மழை இல்லை. இடைவெளிவிட்டு, குறுகிய நேரமே மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் இருந்த அச்சம்போல் யாரும் மனதில் கொள்ளாமல், வார இறுதிவிடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

நான் காலையில் பதிவு செய்து இருந்ததைப் போல், வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்ய உள்ளது. இந்த பருவமழையில் முதல் முறையாக மேகக்கூட்டங்கள் உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து, ஒன்று சேர்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ளார்ந்த பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலும் மழை இருக்கும். தென் சென்னையிலும் இப்போது இருந்து, அவ்வப்போது திடீர், திடீரென குறுகிய நேரம் மட்டுமே மழை பெய்யும்.

நாகை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வீராணம் ஏரி விரைவாக நிறைந்துவிடும். பல மணிநேரமாகமழை பெய்துவருகிறது. விடாது பெய்யும் அடைமழை சிறப்பு.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நாகை மாவட்டத்தில் பெய்த மழை விவரம் வருமாறு-

தலைஞாயிறு- 270 மி.மீ

திருப்பூண்டி- 241 மி.மீ

வேதராண்யம்- 160 மி.மீ

மயிலாடுதுறை- 107 மி.மீ

சீர்காழி- 106 மி.மீ

கொள்ளிடம்- 94 மி.மீ

நாகை- 93 மி.மீ

திருவாரூர், திருத்துறைப்பூண்டி- 127 மி.மீ''

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x