Published : 25 Nov 2017 09:05 AM
Last Updated : 25 Nov 2017 09:05 AM

அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை: பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால் விபரீத முடிவு

அரக்கோணம் அடுத்த பனப்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால் அவர்கள் இந்த சோக முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ‘வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவதி(16), சங்கரி(16), தீபா(16), மனீஷா(16). இவர்கள் அனைவரும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் சரியாக படிக்காததால், நான்கு மாணவிகளையும் அழைத்து பள்ளி தலைமை ஆசிரியை நேற்று முன்தினம் கண்டித்தாராம். மறுநாள் பெற்றோருடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார். இதை பெற்றோரிடம் கூறாத மாணவிகள் 4 பேரும், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். புத்தகப் பைகளை வகுப்பில் வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் 4 பேரும் சென்றுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மாணவிகள் மாயமான தகவல் பரவியது. இதையடுத்து, பள்ளிக்கு அவசரமாக விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அறிந்து பள்ளியை முற்றுகையிட்டனர். சிலர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் திரண்டனர்

அப்போது, பனப்பாக்கம் அருகேயுள்ள மேலப்புலம் புதூர் நங்கமங்கம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகில் மாணவிகளின் சைக்கிள்கள் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர். அருகில் காலணிகள் மட்டும் இருந்தன. நான்கு மாணவிகளும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. அரக்கோணம், ராணிப்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். வெளிச்சம் இல்லாததால் ராட்சத மின்விளக்குகள் உதவியுடன் தேடுதலை துரிதப்படுத்தினர். இரவு 8 மணிக்குள் 4 மாணவிகளின் சடலங்களும் மீட்கப்பட்டதாக’ அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x