Last Updated : 18 Nov, 2017 03:35 PM

 

Published : 18 Nov 2017 03:35 PM
Last Updated : 18 Nov 2017 03:35 PM

குழந்தைகளுக்கு எதிராக பள்ளிகளில் நிகழும் வன்முறை: தீர்வுக்காக சென்னையில் ஒரு கலந்துரையாடல்

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் அமல்படுத்த மாநில அளவிலான கலந்தாய்வு: டி.என்.சி.ஆர்.பி.என் மற்றும் யுனிசெஃப் சார்பில் சென்னையில் நடைபெறுகிறது.

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மாநில அளவிலான கலந்தாய்வு தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் யுனிசெஃப் சார்பில் நேற்று (நவம்பர் 17) தொடங்கியது.

இதில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும், குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்தாய்வை சோசியல் ஆக்‌ஷன் (Social Action) இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், டி.என்.சி.ஆர்.பி.என் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ஜெயராஜ், டி.என்.சி.ஆர்.பி.என் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் சிலுவை வஸ்தியன், தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நிர்மலா, தமிழ்நாடு மாநில பெண்கள்  ஆணையத்தின் தலைவர் வசந்தி தேவி, யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜாப் சக்காரியா, மற்றும் டி.என்.சி.ஆர்.பி.என் சட்ட ஆலோசகர் மார்டின் ஆகியோர் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

ஜாப் சக்காரியா பேசுகையில், “நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளன. பள்ளிகளில் 53% குழந்தைகள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் அவர்கள் மனதளவில் நிறைய பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க யுனிசெஃப், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தை பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற உழைத்துக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

கலந்தாய்வு தொடங்கியவுடன் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மாதிரி வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.  சமர்ப்பிக்கப்பட்ட மாதிரி வரைவு மிக பொதுமைப்படுத்தப்பட்டதாக இருந்ததாகவும், அதில் சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். பள்ளிகளில் குழந்தை பாதுகாப்புக்கென தனியாக ஒரு குழு அமைக்கவேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி மணிவேல் பேசுகையில், “குழந்தை பாதுகாப்புக்கு அரசு தரப்பில் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு மாவட்டத்துக்கு ஒரு நடமாடும் ஊர்தியில், பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். டான்செட்(TANCET) மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி (SCERT) சார்பில் அசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் கல்வி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

தவறான முறையில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அரசு அதிகாரி மணிவேல் கூறியபோது, நிரந்தர பணி நீக்கம் நடந்ததா என்று சிலர் கேள்வி எழுப்பினர். இது அரசு அதிகாரிகளுக்கும் பிற குழுவினருக்கும் இடையே வாக்குவாதத்தில் முடிந்தது. பின்னர் கலந்தாய்வின் ஒருங்கிணைப்பாளர்கள், அனைவரையும் அமைதிப்படுத்தினர்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்தும், வன்முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் அளிக்கும் புகார்களை திறம்பட நிர்வகிப்பது குறித்தும் உணவு இடைவேளைக்குப் பிறகு விவாதிக்கப்பட்டது. இன்று (நவம்பர் 18)  நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து இறுதி வரைவு தயாரிக்கப்படும் என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x