Published : 22 Nov 2017 09:00 PM
Last Updated : 22 Nov 2017 09:00 PM

அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வந்தாலும் விடமாட்டோம்: விஷால் ஆவேசம்

அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும். அன்புசெழியனுக்கு ஆதரவாக எந்த எம்.எல்.ஏ, அமைச்சர் வந்தாலும் விடமாட்டோம் என்று விஷால் கூறியுள்ளார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரின் உடல் சொந்த ஊரான மதுரை கோமதிபுரம் அல்லிநகர் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. இந்நிலையில் இன்று அசோக்குமார் உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

விஷால் இன்று மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். மேலும், அசோக்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறுகையில், ''கந்துவட்டி பிரச்சினை அனைவரையும் பாதித்துள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் நான், கவுதம் மேனன், பார்த்திபன் ஆகியோர் இருக்கிறோம்.

கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். எந்த விளைவுகள் வந்தாலும் பரவாயில்லை,அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும். அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் வந்தாலும் விடமாட்டோம்.

கந்துவட்டியால், அதிக வட்டியால் தயாரிப்பாளரை கொடுமைப்படுத்துவது தவறு. இனி அப்படி நடந்தால் நடப்பதே வேறு. 90% தயாரிப்பாளர்கள் கடனில்தான் இருக்கிறோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம்'' என்று விஷால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x