Last Updated : 23 Jul, 2023 04:17 PM

 

Published : 23 Jul 2023 04:17 PM
Last Updated : 23 Jul 2023 04:17 PM

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் - தாகம் தீர்ப்பது எப்போது?

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகரின் மொத்த பரப்பளவு 257.04 சதுர கிலோ மீட்டர் ஆகும். மாநகரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் தினமும் சராசரியாக 200 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) அளவுக்கும் அதிகமாக குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில், அடுத்த 35 ஆண்டுகளுக்கு பின்னர், மாநகரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், மாநகரில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க ஏதுவாகவும் பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டப் பணியை செயல்படுத்த முடிவு செய்து, கடந்த அதிமுக அரசின் சார்பில் இதற்கான செயல்பாட்டுப் பணி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தினமும் சராசரியாக 170 எம்எல்டி எடுக்கும் வகையில் ரூ.780 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

மொத்தம் 90.76 கிலோ மீட்டர் தூரத்துக்கு பகிர்மானக் குழாய்கள் அமைக்கவும், 178.30 எம்எல்டி அளவுக்கு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் கட்டவும், கட்டன் மலையில் ராட்சத பகிர்மானக் குழாய்களை கொண்டு செல்ல ‘டணல்’ அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் தொடங்கப்பட்டன.

தாமதமாகும் திட்டப்பணி: 2023 மார்ச் இறுதிக்குள் திட்டப் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், குழாய் பதிப்புப் பணிகள் முடிவடையாததால் திட்டப்பணி தாமதமாகி வருகிறது. மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் கவுன்சிலர்கள் குழுவினர் திட்டப்பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘மாநகரின் பல்வேறு இடங்களில் தற்போது சீரான முறையில் குடிநீர் விநியோகிப்பது கிடையாது. குடிநீர் விநியோகிப்பதில் இடைவெளி அதிகம் உள்ளது. பழைய மாநகராட்சிப் பகுதிகள், இணைப்புப் பகுதிகள் என மாநகரில் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க ஏதுவாக பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டப்பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது,‘‘குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்துக்கு பகிர்மானக் குழாய்கள் அமைக்கப் பட்டுள்ளன. டணல் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 2-வது பிரிவில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன’’ என்றனர்.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது,‘‘இன்னும் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே குழாய்கள் பதிக்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 300 மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் அமைக்கும் பணிகள் மிகவும் சிரமமானதாகும். ஒரு குழாய் இணைப்புப் பணியை முடிக்க குறைந்த பட்சம் 4 மணி நேரமாகி விடுகிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் சுத்திகரிக்கப்படாத குடிநீர் கொண்டு வருவதற்கான குழாய் பதிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். ஆகஸ்ட் இறுதிக்குள் ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x