Published : 23 Jul 2023 08:09 AM
Last Updated : 23 Jul 2023 08:09 AM

‘மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ இலக்கை விரைவில் அடைவோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி "எண்ணித் துணிக" என்ற நிகழ்வில் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ஆளுநர் ரவி, "தொழில்முனைவோர்கள் தேசத்தின் சொத்துக்கள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவர்கள். நமது நாடு ஒரு வரலாற்று மாற்றத்தின் உச்சத்தில் இருப்பதால் அந்தந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் மிகப்பெரிய உச்சத்தை எட்ட வேண்டும். 400க்கும் குறைவாக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இன்று நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. தொலைநோக்கு பார்வை கொண்ட தேசிய தலைமையின் கீழ் நமது இளைஞர்கள் பரிணமிப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வோர் தொழில்முனைவோரும் இந்த தேசத்தின் சொத்து. தேசம் கடந்து வரும் உருமாற்றம் நிறைந்த பயணம் அனைவரின் பங்களிப்பு மூலம் சாத்தியமாகும். தூய்மை இந்தியா போன்ற இயக்கங்களின் வெற்றியில் குழந்தைகளின் பங்களிப்பு முக்கியமானது.

தொழில்முனைவோரில் குறிப்பாக இளைஞர்கள், இந்திய மதிப்புகள் மற்றும் இந்திய தன்மையை தங்கள் அன்றாட வாழ்வில் உள்வாங்கிக் கொண்டால் அது நமது இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும். இந்திய சமூகம் என்பது குடும்பங்களைச் சுற்றியே பரிணமித்துள்ளதால், குடும்பத்தின் மதிப்புகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். காளான்கள் போல அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களில் பல குடும்பத்துப் பெற்றோர்கள் வாழ்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின் குறிக்கோளான "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்பது பகிரப்பட்ட எதிர்காலத்தைப் பற்றி பேசவில்லை, ஆனால் ஒரு எதிர்காலத்தின் உண்மையான உணர்வை அது பிரதிபலிக்கிறது. மக்களை ஒரே குடும்பமாக இணைத்து செயல்பட வேண்டும். பாரதத்தின் விரிவான மறுமலர்ச்சியில் கூட்டுப்பணி மூலம் வெளிப்படும் பலம் சக்தியைப் பெருக்கும்" என்று பேசினார்.

தொடர்ந்து, வள்ளலாரின் "வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடினேன்" என்ற வரிகளை மேற்கோள்காட்டிப் பேசிய ஆளுநர், இத்தகைய சிந்தனைதான் இந்திய மதிப்பின் சாராம்சம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், "மிக குறுகிய காலத்தில், உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் என்ற அளவில் உலகின் மிகவும் டிஜிட்டல்மய நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அதேநேரத்தில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, நமது மாநிலத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வோர் மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி என்ற இலக்கை விரைவில் அடைவோம்.

நம்மிடம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திரா எனப்படும் பொது மருந்தகங்கள் உள்ளன. இன்று, ஆயுஷ் (மாற்று மருத்துவம்), இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் உலகளவில் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அடிப்படையிலான மருத்துவ பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். ஜனதன் - ஆதார் - மொபைல் என்ற மூன்றின் இணைப்பு மூலம் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கோவின் செயலி மனிதகுல வரலாற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் தடுப்பூசி இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. இத்தகைய தேசிய சாதனைகள் அனைத்தும் நம்மை பெருமைப்படுத்துகின்றன.

தொழில்முனைவோர் தங்களுக்கான தேசிய பொறுப்பு குறித்தும் தாங்கள் ஆற்றி சாதிக்கும் பணி என்பது வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல் தேசத்துக்கான பங்களிப்பாகவும் அமைய தொடர்ந்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x