Published : 26 Nov 2017 07:03 PM
Last Updated : 26 Nov 2017 07:03 PM

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி குடிசை வாசிகள் அகற்றம்: சிபிஎம் மாநாட்டில் கண்டித்து தீர்மானம்

குடிசைப்பகுதி மக்களை அகற்றும்போது அவர்களை மூன்று கிலோ மீட்டருக்குள் குடியமர்த்த வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை காற்றில் மிதக்க விட்டு வரம்பு மீறி அரசு செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாநாடு இன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

குடிசைமாற்றுவாரியபகுதிகள்

மக்கள் குடியிருக்கும் குடிசை பகுதியை கையகப்படுத்தி, அடிப்படை வசதிகளை உருவாக்கி அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றி விலை நிர்ணயம் செய்து குடிசை மாற்று வாரியம் அளித்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி முடித்த பிறகும் அவர்களுக்கு வீடுகளை சொந்தமாக்க அரசு காலதாமதம் செய்கிறது. மேலும் கையகப்படுத்திய நிலங்களில் வாழும் மக்கள் நிர்ணயித்த தொகையை செலுத்திய பின்பும் குடிசை மாற்று வாரியம் கிரயப்பத்திரம் வழங்க மறுக்கிறது.

கோவில்நிலங்கள்

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு பகுதி மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் மனைகள் இவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் வீடுகள் பழுதடையும் போது அதை சரி செய்ய முடியவில்லை. மேலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது வீடுகளை விரிவுப்படுத்தவும் இயலவில்லை. மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகளாலும் கோவில் நிலங்களில் குடியிருப்போர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள்

சென்னையை அழகுப்படுத்துகிறோம் என்ற பெயரில் குடிசை பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை சென்னையை விட்டு விரட்டும் வேலையை அரசாங்கம் செய்து வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகள் (சூடிவகைநைன ளுடரஅள) என வரையறுத்த மக்களையும் விரட்டுவது கொடுமையானது. ஆற்றங்கரையோரம் பல பெரும் தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களை கட்டியிருக்கும் போது அவர்களை அப்புறப்படுத்தாமல் ஏழை, எளிய மக்களை மட்டும் விரட்டுவது எவ்விதத்தில் நியாயமானது.

மேலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு வெளியேற்றப்படும் மக்களை 3 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே குடியமர்த்த வேண்டும் என சுட்டிக்காட்டியது ஆட்சியாளர்களால் அப்பட்டமாக மீறப்படுகிறது. அது மட்டுமின்றி அதே பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதன் மூலம் அம்மக்களை பாதுகாப்பதற்கு வசதிகள் இருந்தும் அதை அரசு செய்யாமல் தட்டிக்கழிப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக கல்வியாண்டு நடைபெற்று கொண்டிருக்கிற சூழலில் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் வகையில் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் மறு குடியமர்த்துவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

1. குடிசை பகுதி மக்களை அவர்களுடைய வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி சென்னைக்கு வெளியே குடியேற்றுவதை அரசு உடனே நிறுத்த வேண்டும். வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டும்.

2. அரசு துறை சார்ந்த நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அவர்கள் குடியேறிய நாளில் உள்ள அரசு நிர்ணயித்த வழிகாட்டு மதிப்பு விலையை பெற்றுக் கொண்டு பட்டா வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

3. குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்திய பகுதிகளில் நிலத்தை வகை மாற்றம் செய்து கிரயப்பத்திரம் வழங்க வேண்டும்.

4. கோவில் நிலங்களில் வாழ்பவர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து குடியிருப்புகளை சொந்தமாக்க வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x