Published : 22 Jul 2023 05:22 AM
Last Updated : 22 Jul 2023 05:22 AM

வணிகவரி, பதிவுத்துறை சார்பில் ரூ.14.65 கோடியில் அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: வணிகவரி, பதிவுத்துறை சார்பில் ரூ.14.65 கோடியில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் ரூ.8 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், தேனியில் ரூ.3 கோடியே 51 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டிடம், சேந்தமங்கலம் மற்றும் பள்ளியாடி ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 7 புதிய வணிகவரி நிர்வாகக் கோட்டங்கள், 6 புதியவணிகவரி நுண்ணறிவுக் கோட்டங்கள், 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் மற்றும் 2 புதிய பதிவு மாவட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் தீரஜ் குமார், வணிகவரி மற்றும்பதிவுத் துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வணிகவரி இணை ஆணையர் (நிர்வாகம்) வே.இரா.சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் புதிதாக வணிகவரி கோட்டம் தொடங்கப்பட்டதற்காக சிவகாசி பட்டாசு வணிகர் சங்கங்களின் தலைவர் கணேசன், லவ்லி ஆப்செட் பிரின்டர்ஸ் நிறுவன இயக்குநர் கே.செல்வகுமார் ஆகியோர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வணிகவரிக்கு அந்தந்த மாவட்டத்தில் கோட்டம் உருவாக்குவதன் மூலம் வியாபாரிகளுக்கு பயண நேரம் சேமிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x