Published : 21 Nov 2017 08:31 AM
Last Updated : 21 Nov 2017 08:31 AM

மதுரை அருகே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி திரண்டனர்: 6000 விவசாயிகள் 8 மணி நேரம் மறியல்

மதுரை மாவட்டம், மேலூரில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி, பெரியாறு ஒருபோக விவசாயிகள் மதுரை - திருச்சி நான்கு வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் 8 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பெரியாறு அணையில் இருந்து பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து பெரியாறு ஒருபோக கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காமல் பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய்க்கு மட்டும் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைக் கண்டித்தும், பெரியாறு ஒருபோக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரியும், மேலூரில் ஒருபோக சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 ஆயிரம் பேர் மறியல்

காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். அதன்பிறகு அங்கிருந்து விவசாயிகள், பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் 3 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் நேற்று காலை 10 மணியில் இருந்து அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகன ஓட்டிகள், பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

இதையடுத்து, மதுரையில் இருந்து சென்ற வாகனங்கள் ஊமச்சிகுளம், நத்தம் சாலை, கொட்டாம்பட்டி வழியாகவும், சென்னை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள், திருவாதவூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டன. விவசாயிகள், ஆட்சியர் நேரடியாக போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் மட்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தால் 8 மணி நேரத்துக்கும் மேலாக மதுரை - திருச்சி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுகுறித்து ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் மேலூரைச் சேர்ந்த முருகன் கூறியதாவது:

பெரியாறு ஒருபோக கால்வாய் பாசனத்தை நம்பி மேலூர், மதுரை வடக்கு பகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. வைகை அணையில் தண்ணீர் திறக்காததால் இந்த நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. வைகை அணை கட்டுவதற்கு முன்பிருந்தே பெரியாறு ஒருபோக விவசாய பாசனத்துக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வந்தது. வைகை அணையை கட்டிய பிறகுதான் திருமங்கலம் கால்வாய், சிங்கம்புணரி கால்வாய், பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய் என விரிவாக்கம் செய்தனர்.

பொதுவாக விவசாய பாசனத்துக்கு கம்பம் பள்ளத்தாக்கு, பெரியாறு இருபோகம், பெரியாறு ஒரு போகம், திருமங்கலம் கால்வாய் ஆகியவற்றை அடுத்துதான் பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய்க்கும், சிங்கம்புணரி கால்வாய்க்கும் தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆனால், எங்கள் உரிமையை பறிக்கும் வகையில் எங்களுக்கு முன்பாகவே பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மழையில்லை என்றனர். இந்த ஆண்டும் மழையில்லை என்றனர். அதற்கும் அமைதியாக இருந்தோம். ஆனால் எங்களிடம் பொய் சொல்லிவிட்டு எங்களுக்கு பின் திறக்க வேண்டிய கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டது நியாயமல்ல என்றார். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேலூர் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

7 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பு

இந்நிலையில், திருமங்கலம், மேலூர் பகுதிகளுக்கு இன்றுமுதல் 7 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால், நிலத்தடி நீர் வறண்டு, குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தண்ணீர் இன்றி சிரமப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரியுள்ளனர்.

இதையேற்று, வைகை அணையில் இருந்து கூடுதலாக 900 கனஅடி தண்ணீரை சிறப்பு நிகழ்வாக வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 7 நாட்களுக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக 200 கனஅடியும், பெரியாறு பிரதான கால்வாய் வழியாக 700 கனஅடியும் தண்ணீர் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேலூரில் நடந்த மறியல் நேற்று மாலை முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x