Published : 16 Nov 2017 10:07 AM
Last Updated : 16 Nov 2017 10:07 AM

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: வேளாண் ஆணையர் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தல்

சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண்மை குறித்த திட்டங்களை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார முகாம்களை நடத்தும் பொறுப்பு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பரத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. கள விளம்பரத் துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் சார்பில் இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் இம்மாதம் கடைசி வாரத்தில் இருந்து நடத்தப்பட உள்ளன.

இதையொட்டி, களவிளம்பரத் துறையின் அலுவலர்கள், மத்திய அரசின் ஊடக பிரதிநிதிகள், இசை - நாடகப் பிரிவு கலைஞர்களுக்கான பயிலரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த பயிலரங்கை தொடங்கிவைத்து ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:

இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

8 லட்சம் விவசாயிகள்

இத்திட்டத்தில், தமிழகத்தில் முதல் ஆண்டில் 7 முதல் 8 லட்சம் விவசாயிகள் மட்டுமே சேர்ந்தனர். ஆனால், இத்திட்டம் குறித்து தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வின் விளைவாக தற்போது 15.50 லட்சம் விவசாயிகள் சேர்ந்துள்ளனர். விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், விவசாயிகள் தங்கள் பயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈடு பெற முடியாது. பிரீமியத் தொகையை அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் செலுத்தலாம்.

மேலும், சொட்டுநீர் பாசனத்தை ஊக்கப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.803 கோடி மானியமாக வழங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ககன்தீப் சிங் பேடி பேசினார்.

இப்பயிலரங்கில், களவிளம்பர துறை இயக்குநர் எம்.அண்ணாதுரை, உதவி இயக்குநர் டாக்டர் டி.சிவக்குமார், பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் ஜெனரல் (தென்மண்டலம்) கே.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x