Published : 20 Jul 2023 08:25 PM
Last Updated : 20 Jul 2023 08:25 PM

திமுக எம்பி.க்கு எதிரான கொலை வழக்கு | விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக எம்பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு விசாரணையை கடலூர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த கடலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு என்ற ஊரை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கில் திமுக எம்பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யபட்டனர்.

இந்த கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸார், கடலூர் எம்பி. ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதால் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "இந்த வழக்கு விசாரணை நடைபெறும் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரமேஷ் கலந்து கொள்கிறார். அவருடன் அரசு அதிகாரிகளும் தொடர்பில் உள்ளனர். இது அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மேலும் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இது அச்ச உணர்வை ஏற்படுத்தும். காவல்துறை விசாரணையில் எம்பி. ரமேஷ் தலையிட்டு, வழக்கை திசை திருப்ப முயல்வதால் அரசு வழக்கறிஞர் மீது நம்பிக்கை இல்லை" என்று மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்பி. விசாரணை நீதிமன்றம் அமைந்துள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதே, வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான காரணம் உள்ளது எனக்கூறி, வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டாம். விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை கடலூர் நீதிமன்றத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். செங்கல்பட்டு நீதிமன்றம் இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x