Published : 20 Jul 2023 09:00 AM
Last Updated : 20 Jul 2023 09:00 AM

போடாத புறவழிச் சாலையால் உத்திரமேரூரில் தீராத நெரிசல்: நிதி ஒதுக்கி 10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்

போடாத புறவழிச் சாலையால் உத்திரமேரூரில் தீராத நெரிசல்நிதி ஒதுக்கி 10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்இரா.ஜெயபிரகாஷ்உத்திரமேரூர் அருகே அ.பி.சத்திரத்தில் இருந்து வேடப்பாளையம் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் நில அளவீடுகள் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாததால் தினம்தோறும் உத்திரமேரூர் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

உத்திரமேரூர் வட்டத்தில் உத்திர மேரூர் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் பெருக்கம் என நாளுக்கு நாள் இப்பகுதிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் காரணமாக உத்திரமேரூர் நகரத்துக்குள் வரும் வாகனங்களின் எண்ணி்க்கையும் அதிகரித்துள்ளது. இதனால் உத்திரமேரூர் பகுதியில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் உத்திரமேரூரைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் செல்லும் வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் உத்திரமேரூர் பஜார் வீதியில்கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இந்த போக்குவரத்து நெரிசலை அதிகமாக்குகின்றன. இதனால் இந்த பஜார் வீதியில் நடந்து செல்வதே பெரும் சவலாக உள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உடனடியாக பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உத்திரமேரூர் அருகே புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு உத்திமேரூர் செங்கல்பட்டு சாலையில் உள்ள அ.பி.சத்திரம் சாலையில் தொடங்கி வேடப்பாளையம் வழியாகச் சென்று வந்தவாசி சாலையில் இணையும் வகையில் 4.2 கி.மீ தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் செங்கல்பட்டில் இருந்து வந்தவாசி வழியாகச் செல்லும் வாகனங்கள் உத்திரமேரூர் பகுதிக்குள் வர வேண்டிய தேவை இருக்காது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். இதற்கான நிலம் அளவிடும் பணிகளும் நடைபெற்றன. ஆனால் அதற்குபிறகு அந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உத்திரமேரூர் பகுதி நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இந்த சாலைப் பணிக்காக ரூ.52 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்காதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செல்வகுமார்

இதுகுறித்து சமூக ஆர்வலரும் உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவருமான செல்வகுமார் கூறியதாவது: புறவழிச் சாலைத் திட்டம் 2013-ல் அறிவிக்கப்பட்டு இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இதனால் உத்திரமேரூர் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நிதி ஒதுக்கப்பட்டும் இந்தத் திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. பொதுமக்களின் நலனை கருத்திக் கொண்டு உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கே.நேரு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது: உத்திரமேரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டுமானால் அ.பி.சத்திரத்தில் இருந்து வேடப்பாளையம் வழியாக புறவழிச் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இருந்தபோது மனு அளித்தோம். அவர் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. 4 விவசாயிகள் நிலம் தர மறுக்கின்றனர் என்றார்.

அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழைத்துப் பேசி உரிய இழப்பீடு தந்து இந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உத்திரமேரூர் பகுதிக்குள் இருக்கும் பேருந்து நிலையத்தை வேடப்பாளையம் பகுதிக்குமாற்ற வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு கூறினார்.

இந்த விவகாரம் குறித்து உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த புறழிச் சாலைத் திட்டம் செங்கல்பட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை (திட்டப் பிரிவு) அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் அளவீட்டுடன் பணிகள் அப்படியே இருக்கின்றன. அவர்கள்தான் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x