Published : 06 Nov 2017 09:06 AM
Last Updated : 06 Nov 2017 09:06 AM

முதல்வர், ஆட்சியர், காவல் ஆணையரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது - நெல்லை மாவட்ட போலீஸார் நடவடிக்கை

கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையப்படுத்தி தமிழக முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, பலமுறை புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், கலெக்டரிடம் புகார் அளித்தார்.

அவரும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முடிவை எடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கந்து வட்டிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டு பகிரப்பட்டன.

சென்னை மாங்காடு சத்தியா நகரில் வசிக்கும் கார்ட்டூனிஸ்ட் பாலாவும் (36) தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைந்தார். அதில் தமிழக முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதை அக்டோபர் 24-ம் தேதி இரவு 11.55 மணி அளவில் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில், ஆத்திரத்தின் உச்சத்தில் நான் வரைந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். தான் நடத்தி வரும் லைன்ஸ் மீடியாவிலும் இந்த கேலிச் சித்திரத்தை பதிவு செய்திருந்தார். அவரது முகநூல் பதிவை சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்திருந்தனர்.

ஆட்சியர் புகார்

கார்டூனிஸ்ட் பாலாவின் கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67-வது பிரிவு (ஒருவரை அவமானப்படுத்தும் விதமாகவோ, காமத்தை தூண்டும் வகையிலோ படம் வரைந்து அதை மின்னணு தொழில்நுட்பம் மூலம் பகிர்தல்), இந்திய தண்டனைச் சட்டம் 501-வது பிரிவு(அவதூறு பரப்புதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பாலாவின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று காலையில் மாங்காட்டில் உள்ள பாலாவின் வீட்டுக்கு சென்ற நெல்லை மாவட்ட போலீஸார், அவரை கைது செய்து நெல்லைக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து கார்டூனிஸ்ட் பாலாவின் மனைவி சாந்தினி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மதியம் 1.30 மணியளவில் சீருடை அணியாத 5 போலீஸார் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, அவர்களிடம் ‘நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எதற்காக வந்துள்ளீர்கள், கைது செய்ய வாரண்ட் இருந்தால் காண்பியுங்கள்’ என கேட்டோம். அவர்கள் முறையாக பதில் கூறவில்லை.

தொடர்ந்து கேள்வி கேட்கவே, ‘திருநெல்வேலி குற்றப்பிரிவிலிருந்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததால் உங்கள் கணவரை கைது செய்கிறோம்’ என்றனர். பின்னர், திடீரென எனது கணவரை இழுத்துச் சென்றனர். அப்போது எனது கணவர் ‘நான்தான் உடன் வருவதாக கூறுகிறேனே. பின்னர் ஏன் இழுக்கிறீர்கள்’ என அவர்களிடம் கேட்டார். ஆனால், அவர்கள் எதையும் பொருட்படுத்தவில்லை.

எந்த தவறும் செய்யவில்லை

மேலும், வீட்டிலிருந்து கணினி, செல்போன் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றனர். பொருட்களை எடுத்துச் சென்றது குறித்து எங்களிடம் எந்த கையெழுத்தும் அவர்கள் வாங்கவில்லை. எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளாக கார்ட்டூன் வரைந்து வருகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்நிலையில், அவரிடம் போலீஸார் அராஜகமான முறையில் நடந்துகொண்டனர். இது எந்தவிதத்தில் நியாயம்? அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x