Published : 08 Nov 2017 08:53 AM
Last Updated : 08 Nov 2017 08:53 AM

200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மாயம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான விஸ்வநாத சுவாமி கோயிலில் ஐம்பொன்னால் ஆன முருகன், தெய்வானை சிலைகள் மாயமாகி உள்ளன.

வடகாடு கிராமத்தில் விஸ்வநாத சுவாமி உடனுறை விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கருவறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள முருகன், வள்ளி, தெய்வானை, மாரியம்மன் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று காலை கோயிலின் அருகே குடியிருக்கும் ஒருவர், கோயிலின் வெளிக் கதவை திறந்து விளக்கை அணைக்கச் சென்றார். அப்போது, உள்ளே உள்ள அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கோயில் நிர்வாகிகளுக்கும் முத்துப்பேட்டை போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.

முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வந்து கருவறைக்குள் பார்த்தபோது, அங்கு இருந்த சுமார் ரூ.3 கோடிக்கு மேல் மதிப்புள்ள முருகன், தெய்வானை ஆகிய ஐம்பொன் சிலைகள் மாயமானது தெரியவந்தது. வள்ளி, மாரியம்மன் ஆகிய ஐம்பொன் சிலைகள் பத்திரமாக இருந்தன. மாயமான 2 சிலைகளும் சுமார் இரண்டரை அடி உயரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பின்புற சுற்றுச்சுவர் வழியாக ஏறிக்குதித்து முன்புற மண்டப கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கருவறையின் பூட்டை உடைத்து சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து கோயில் குருக்கள் சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x