Published : 18 Nov 2017 10:22 AM
Last Updated : 18 Nov 2017 10:22 AM

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்147 உதவி பொறியாளர்கள் காலியிடங்களை நிரப்ப தேர்வு: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

உதவிப் பொறியாளர் மற்றும் அதற்கு இணையான பதவியில் 147 காலியிடங்களை நிரப்பு வதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பிப்ரவரி 24-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவியில் 14 காலியிடங்களும், இளநிலை மின்னணு ஆய்வாளர் பதவியில் 3 பணியிடங்களும், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் பதவி யில் 117 காலியிடங்களும், மீன்வள பொறியியல் துறையில் 13 உதவி பொறியாளர் பணியிடங்களும் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறும்.

உதவி இயக்குநர் பதவிக்கு மெக்கானிக்கல், புரொடக்சன், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரிகளும், இளநிலை மின்னணு ஆய்வாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும், உதவி இன்ஜினீயர் பதவிக்கு சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக் சன் , இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும், பிஇ. (வேளாண்மை) பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பாட தேர்வு, பொது அறிவு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப் படுவார்கள். இதில் தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வுக்கு டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x