Last Updated : 08 Nov, 2017 09:06 AM

 

Published : 08 Nov 2017 09:06 AM
Last Updated : 08 Nov 2017 09:06 AM

கருணாநிதி - மோடி சந்திப்பு: தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?- அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

திமுக தலைவர் கருணாநிதி - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாது என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி - மோடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் 'தி இந்து'விடம் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்:

அதிமுக அரசை எதிர்ப்பது போலவே மத்திய பாஜக அரசையும் திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமான அறிவித்து திமுக சார்பில் புதன்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எனவே, கருணாநிதி - மோடி சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

நாட்டின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்திருப்பது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றபடி இதில் அரசியல் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை என திமுகவே தெளிவுபடுத்தி விட்டது.

மத்திய கப்பல், நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: கருணாநிதியை மோடி சந்தித்தது அரசியல் கலப்பில்லாதது. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரை மோடி சந்தித்து உடல்நலம் விசாரித்தது மனிதாபிமான அடிப்படையிலானது. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்ப்பது வழக்கமாகி விட்டது. கருணாநிதியை சந்தித்தபோது மோடி பேசியதை கேட்ட நாங்கள் நெகிழ்ந்து போனோம். இதனை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: கொள்கை வேறுபாடு உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் சகஜமானதாக உள்ளது. கருணாநிதி - மோடி சந்திப்பின் மூலம் தமிழகத்திலும் அந்த அரசியல் நயத்தகு அரசியல் நாகரிகம் மலர்ந்தால் மகிழ்ச்சிதான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:

அண்மைக் காலமாக மதவாத எதிர்ப்பில் திமுக தீவிரம் காட்டி வருகிறது, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து வருகிறது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளோடும் திமுக இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே, திமுகவை முழுமையாக எதிர்நிலைக்கு தள்ளிவிடக் கூடாது என மோடி நினைத்திருக்கலாம். மனிதநேய அடிப்படையில் இந்தச் சந்திப்பு நடந்திருந்தாலும், இத்தகைய அரசியல் கண்ணோட்டமும் இழையோடுவது கவனிக்கக் கூடியதாகவே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x