Published : 18 Jul 2023 04:09 PM
Last Updated : 18 Jul 2023 04:09 PM

அமலாக்கத் துறை விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி, மகன் மீண்டும் ஆஜர்

கோப்புப்படம்

சென்னை: அமலாக்கத் துறை நேற்று அனுப்பிய சம்மனின் அடிப்படையில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு ஆஜராகினர். அமைச்சர் பொன்முடியுடன், வழக்கறிஞர் ஒருவரும், மருத்துவர் ஒருவரும் உடன் சென்றுள்ளனர்.

சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினரின் அமைச்சரின் சென்னை வீட்டில் இருந்து, கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.70 லட்சம் ரொக்கம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

13 மணி நேர சோதனைக்கு பிறகு, திங்கள்கிழமை இரவு அமைச்சர் பொன்முடியை அதிகாரிகள் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். நள்ளிரவை தாண்டியும் இந்த விசாரணை நீடித்தது. 13 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனைக்கு பிறகு, இரவு 8 மணிஅளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரது காரில் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்தது. அப்போது, மகன் அசோக் உடன் இருந்தார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் இரவு 9 மணிக்கு தொடங்கிய விசாரணை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்தது.

இதன்படி, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோயில் அவென்யூவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மூத்த மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகினர்.

பொதுவாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தும் இதுபோன்ற சோதனைகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படும். சம்மனைப் பெற்றுக்கொண்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள், நேரடியாகவோ அல்லது அவர்களது தரப்பில் வழக்கறிஞரோ சட்டப்படி ஆஜராக முடியும்.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோருடன் மருத்துவர் ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அமலாக்கத்துறை நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், கேள்விகள் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை இயக்குநர் அளவிலான அதிகாரி ஒருவர் இந்த விசாரணையை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், நேற்றே அமைச்சர் பொன்முடிக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததால், விசாரணையை விரைவில் முடிக்க அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x