Last Updated : 18 Jul, 2023 09:09 AM

 

Published : 18 Jul 2023 09:09 AM
Last Updated : 18 Jul 2023 09:09 AM

ரயில்களின் எண்ணிக்கை - சென்னையில் இருந்து தாம்பரத்துக்கு அதிகம்; திருவள்ளூர், கும்மிடிப்பூண்டிக்கு குறைவு!

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களை விட குறைவான ரயில் சேவைகள் இந்த மார்க்கங்களில் வழங்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த மார்க்கங்களில் கூடுதல் ரயில் சேவை வழங்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

தெற்கு ரயில்வேயில் முக்கியமான கோட்டமாக சென்னை ரயில்வே கோட்டம் உள்ளது. சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் இக்கோட்டம் பெரும் பங்கு வகுக்கிறது. 697 கி.மீ தொலைவுக்கான எல்லையை இந்த கோட்டம் கொண்டுள்ளது.

இந்த ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கம், சென்னை சென்ட்ரல்-பொன்னேரி- கும்மிடிப்பூண்டி மார்க்கம், சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கம், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கம் ஆகிய மார்க்கங்களில் ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த மார்க்கங்கள் வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வேலைக்காகவும், கல்விக்காகவும் நாள்தோறும் லட்சக்கணக்கானனோர் நகரத்துக்கு வந்து செல்கின்றனர். மின்சார ரயில்களைப் பொருத்தவரை சுமார் 650 சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர். குறைவான கட்டணம், குறிப்பிட்ட இடத்தை விரைவாக அடையும் வசதி ஆகியவற்றால், ஏழை, நடுத்தர மக்களுக்கு மின்சார ரயில்கள் வரப்பிரசாதமாக உள்ளன. புறநகர் ரயில்சேவை போல, நெடுஞ்தொலைவுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இந்த வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தென், மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் நாள்தோறும் 250-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், மெயில், அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ரயில்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையவில்லை என்பதுதே உண்மை.

சென்னை கடற்கரை - தாம்பரம்:

சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இருமார்க்கமாக தினசரி 250 மின்சார ரயில் சேவை வழங்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயிலும், மற்றநேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. இதுதவிர, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் அடுத்த நிறுத்தமாக தாம்பரம் ரயில்நிலையத்தில் நின்று செல்கிறது. இது தென் சென்னை பகுதியில் வசதிக்கும் மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

அதேநேரத்தில், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் கூடுதல் மின்சார ரயில்சேவை இல்லாததால், பயணிகள் நெரிசலுடன் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் விரைவு ரயில்கள் நின்று செல்ல நிறுத்தம் வழங்கப்படாததால் நெடுந்தொலைவு போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர்:

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மார்க்கத்தில் நாள்தோறும் இரு மார்க்கமாக சுமார் 90 ரயில் சேவைகள் வழங்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் 15 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் மட்டும் இயக்கப்படுகின்றன. நெரிசல் இல்லாத நேரத்தில் அரைமணி நேரம், 45 நிமிடத்துக்கு என ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல, திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நிறுத்தப்படாததால், இம்மாவட்ட பொதுமக்கள் சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து, அங்கிருந்து விரைவு ரயில்களில் பயணிக்க வேண்டியுள்ளது. இது அவர்களுக்கு கூடுதல் நேரத்தையும் செலவையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச் சங்க செயலாளர்

கே.பாஸ்கர்

கூறியதாவது: சென்னை புறநகர் வழித்தடத்தில் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை- திருவள்ளூர் மார்க்கம் முக்கியமானதாகும். திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பும் என்ற நிலை உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வழியாக 60 விரைவு ரயில்கள் செல்கின்றன. ஆனால், 11 விரைவுரயில்கள்தான் திருவள்ளூரில் நிறுத்தப்படுகின்றன. இது போதுமானதாக இல்லை. மேலும் 9 விரைவு ரயில்களை நிறுத்த நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.இதுவரை நிறைவேற்றவில்லை.

மூன்றில் ஒரு பங்கு விரைவு ரயிலாவது நிறுத்த வேண்டும். நாள்தோறும் நெரிசல் மிகுந்த நேரங்களில் லோக்கல் பாஸ்ட் ரயிலை இயக்க வேண்டும். இதன்மூலம்,அந்த நேரங்களில் பயண நெருக்கடி குறையும். கூடுதல் மின்சார ரயில் சேவை அளிப்பது, விரைவு ரயில்கள் நிறுத்தம் அமைப்பதன் மூலம், இந்த மாவட்டம் மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை - கும்மிடிப்பூண்டி:

இதேபோல் சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலும் நாள்தோறும் இருமார்க்கமாகவும் 80 மின்சார ரயில் சேவை வழங்கப்படுகிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் அரைமணி நேரத்துக்கு ஒரு ரயிலும், நெரிசல் இல்லாத நேரத்தில் 45 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சர்க்கார் விரைவுரயில் மட்டும் நிறுத்தப்படுகிறது. இங்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் இதுவரை செவிசாய்க்கவில்லை.

கு.பிரதாப்

இது குறித்து பொன்னேரியைச் சேர்ந்த ரயில் பயணி கு.பிரதாப் கூறியதாவது: சென்னையில் இருந்து சூலூர்பேட்டை வரை 87 கி.மீ. தொலைவில்தான் முதல் விரைவு ரயில் நிறுத்தம் வழங்கப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் விரைவுரயில்கள் நிறுத்தம் கொடுக்க வேண்டும்.

கும்மிடிப்பூண்டி தொழிற் சாலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு போதுமான மின்சார ரயில் சேவை இல்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.20 மணிக்குபிறகு மின்சார ரயில் சேவை கிடையாது. கடைசி ரயிலை தவறவிட்டால், மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தான் அடுத்த ரயிலில் செல்லும் நிலை உள்ளது. நள்ளிரவு வரை ரயில் சேவை வழங்க வேண்டும்.

மேலும், சென்னை-கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர் நிலையங்களில் ஆங்காங்கே நெடுநேரம் நிறுத்துகிறார்கள். இதனால், அலுவலகத்துக்கு செல்வோர் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை - செங்கல்பட்டு:

சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் அடிக்கடி ரயில்சேவை இருக்கும் நிலையில், தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் போதிய ரயில் சேவை இல்லாத நிலை உள்ளது. பீக் அவர்ஸ் தவிர, மற்ற நேரங்களில் 45 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற நிலை இருக்கிறது,. இதனால், பொத்தேரி, மறைமலை நகர், செங்கல்பட்டுக்கு வந்து செல்லும் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இங்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கம் போல,மற்ற மார்க்கங்களில் கூடுதல் ரயில் சேவை வழங்குவது மூலமாக, அப்பகுதிகளில் பொருளாதாரம் மேம்பட ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என்பதை பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில் சேவை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுக்கிறது. அந்தவகையில், சென்னை-திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் படிப்படியாக ரயில்சேவை அதிகரிக்கப்படும். திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்துவது தொடர்பான கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x