Published : 09 Nov 2017 09:47 AM
Last Updated : 09 Nov 2017 09:47 AM

நாகப்பட்டினம் மாவட்ட வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிக்கல் நீடிக்கிறது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிக்கல் நீடிக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில் நேற்று மழை வெகுவாக குறைந்திருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே மாநிலத்திலேயே மிக அதிக அளவு மழை நாகை மாவட்டத்தில் பெய்துவந்தது.

இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஓரளவு குறைந்த மழையின் அளவு நேற்று முழுவதுமாகக் குறைந்தி ருந்தது.

நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், தண்ணீர் சூழ்ந்து தீவாகக் காட்சியளிக்கும் தலைஞாயிறை அடுத்த வண்டல் மற்றும் குண்டூரான்வெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சாலை வழியாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால், படகைப் பயன்படுத்தி அருகில் உள்ள அவுரிக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குச் சென்றனர். பொதுமக்களும் தங்களின் வழக்கமான பணிகளை படகின் உதவியுடனேயே செய்ய முடிந்தது.

வடிகால் வாய்க்கால்கள் சரியில்லாததால் வயல்களில் தேங்கியிருக்கும் மழைநீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மழைநீர் நன்கு வடிந்துள்ள வயல்களிலும் பயிர்கள் சாய்ந்து, அழுகிய நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நீர் வடிய தாமதமாகும் ஒவ் வொரு நாளும் நெற்பயிர்கள் முற்றிலுமாக சாய்ந்து அழுகுவதற்கே வாய்ப்பாகும் என்று கூறிய விவசாயிகள், வேளாண் அமைச்சர் தலைஞாயிறு, மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் வட்டாரங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு வடிகால் வசதிக்கு தேவையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்): மணல்மேடு 32, நாகப்பட்டினம் 70.70, சீர்காழி 3.40, வேதாரண்யம் 51.40, தரங்கம்பாடி 9, திருப்பூண்டி 70.40, தலைஞாயிறு 75.20, கொள்ளிடம் 13 மில்லிமீட்டர். சராசரி மழை அளவு 36.12 மி.மீ. ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x