Published : 06 Nov 2017 10:58 AM
Last Updated : 06 Nov 2017 10:58 AM

மூத்த பத்திரிகையாளர் மோகன் காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், பத்திரிகையாளர்கள் சங்க பொதுச் செயலாளருமான இரா.மோகன் மாரடைப்பால் நேற்று காலமானார்.

‘தினகரன்’ நாளிதழின் சென்னை பதிப்பில் மூத்த நிருபராக பணியாற்றியவர் இரா.மோகன் (54). இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மோகன், சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சுமார் 30 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியுள்ள இவர், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (எம்.யூ.ஜெ) பொதுச்செயலாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் மருத்துவமனைக்கு வந்து மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரின் உடல் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீக்கதிர் செய்தி ஆசிரியர் மயிலை பாலு தலைமையில் பத்திரிகையாளர்கள் வீர வணக்கம் செலுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், நக்கீரன் ஆசிரியர் கோபால், சன் நியூஸ் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா, மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட பலர் மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான குடியாத்தத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மோகனின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸும், இந்திய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x