Published : 01 Nov 2017 11:23 AM
Last Updated : 01 Nov 2017 11:23 AM

மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் கீழடியில் அகழாய்வு: ஜனவரியில் தொடங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

கீழடியில் மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் வருகிற ஜனவரியில் ஆய்வு நடத்தும் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் உடன் இருந்தார். அவர்களிடம் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், உதவி தொல்லியலாளர் வீரராகவன் ஆகியோர் ஆவணப்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கினர்.

அதற்குப்பின், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு சர்வதேச கவனம் பெற்றுள்ளது. கீழடியில் கடந்த மூன்றாண்டு காலம் நடந்த அகழாய்வில் 7,518 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் தொன்மை சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தெரியவந்துள்ளது.

4-ம் கட்ட அகழாய்வு பணியில் தமிழ்நாடு தொல்லியல்துறையில் இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். அழகன்குளத்தில் அகழாய்வு செய்த இயக்குநர் இரா.சிவானந்தம் தலைமையிலான குழுவினர் கீழடியில் அகழாய்வு மேற்கொள்வர். இதற்காக ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தபின் 2 மாதங்கள் கழித்து ஆய்வு நடைபெறும். இங்கு ஒரு ஏக்கரில் கள அருங்காட்சியகம் அமையவுள்ளது. மைசூரில் உள்ள 1,800 தொல்பொருட்கள் பத்திரமாக உள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய மனிதன்

இந்த அகழாய்வு மூலம் வரலாற்று காலத்துக்கு முந்தைய மனிதன், தமிழகத்தில் வாழ்ந்தான் என்ற பதிவுகளை வெளி உலகுக்கு கொண்டுவர முடியும். இதேபோன்று, அரியலூரில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டை வடிவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதேபோல, தமிழகத்தில் 35 அருங்காட்சியகங்களை வலுப்படுத்த உள்ளோம்.

குறிப்பாக சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக உருமாற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.11 கோடி வழங்கியுள்ளார். தற்போது மேலும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அச்சம் தேவையில்லை

மத்திய தொல்லியல் துறையை ஏதோ விரோதிபோல நினைப்பதை நிறுத்தவேண்டும். தமிழக தொல்லியல் துறையில் மொத்தமே 100 பணியாளர்கள் தான் உள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் மத்திய தொல்லியல் துறையினர் 1,500 பேர் பணிபுரிகின்றனர். மத்திய தொல்லியல்துறை மிகப்பெரிய அரசு நிறுவனம். சில மாதிரிகளை வைத்து, தமிழர்களின் வரலாற்றை திருத்தி விடுவர் என்ற அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

மத்திய தொல்லியல் துறை ரூ. 10 ஆயிரம் கோடி நிதியில் இயங்குகிறது. தமிழக அரசு ரூ. 23 கோடி நிதியில்தான் இயங்கி வருகிறது. தமிழகத்தில் மாநில அரசு தொன்மையான 91 இடங்களை பராமரித்து வருகிறது. ஆனால், மத்திய தொல்லியல் துறை 413 இடங்களை பராமரிக்கிறது. யுனெஸ்கோ அறிவித்த தஞ்சை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களை மத்திய தொல்லியல் துறைதான் பராமரித்து வருகிறது. தமிழகத்தில் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 505 வரலாற்றுத் தொன்மையுள்ள இடங்கள் உள்ளன. இதனை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்ற, மத்திய அரசிடம் ரூ. 100 கோடி கேட்டுள்ளோம். அடுத்த ஆண்டு நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x