Published : 02 Nov 2017 07:36 PM
Last Updated : 02 Nov 2017 07:36 PM

சென்னையில் பெய்யும் மழைக்கு சேலத்தில் குடைபிடித்து முதல்வர் பழனிசாமி நாடகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னையில் மழை வந்தால் சேலத்தில் குடைபிடிப்பது போல என்று கூறும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் ஈடுபடவில்லை என்றால் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வடசென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மழையால் பாதிக்கப்பட்டு தவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள், பால், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டேன். குறிப்பாக ஓட்டேரியில் உள்ள கால்வாய் தூர்ந்து போய், ஆகாய தாமரைகள் முளைத்து, பாழ்பட்டு, அதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அனைவரும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு தந்திருக்கிறார்கள். அப்படி புகார் கொடுத்தவுடன் அவர்கள் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது மழை நீர் இப்பகுதியில் தேங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, மின்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பாக, 'மின்தடை எங்கும் ஏற்படாது, எந்த இடத்திலும் மின்கசிவு ஏற்படாது, அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்கூட்டியே எடுத்திருக்கிறோம்' என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அப்படி எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. அதனால், பல இடங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கொடுங்கையூர் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்களுக்கு இடுகாட்டுக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினேன்.

நேற்றைய தினம் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் 30-10-2017 அன்று 8 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில், பொதுப்பணித்துறையின் சார்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருப்பதாக, ஒரு செய்தி ஆதாரங்களுடன் வந்தது. ஆனால், வடகிழக்குப் பருவமழை பெரியளவில் வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் சுமார் 25 நாட்களுக்கு முன்பே அறிவித்தது. ஆனால், அதிமுக ஆட்சியாளர்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தி, மக்களுடைய வரிப்பணத்தில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் மழை வந்தால் சேலத்தில் குடை பிடிப்பது போல என்று கூறும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, மழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொள்வதுடன், உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டும். இதையெல்லாம் அவரால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக அவர் ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x