Published : 15 Jul 2023 11:54 PM
Last Updated : 15 Jul 2023 11:54 PM

பருவநிலை மாற்றத்துக்கு தீர்வாக அதிக மரக்கன்றுகளை நட வேண்டும் - ஜி.கே.மணி வலியுறுத்தல்

தருமபுரி: பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு ஏற்படுத்த அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என தருமபுரியில் நடந்த பசுமைத் தாயகம் அமைப்பின் கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சிறப்புப் பொதுக் குழு மற்றும் பொறுப்பாளர்களுக்கு நியமன சான்று அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 15) நடந்தது.

பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் மாது இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் வீரமணி வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர்கள் அருள்(கிழக்கு), ராம்குமார்(மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பாமக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் ஜி.கே.மணி எம்எல்ஏ பேசியது: பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு ஏற்படுத்த அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நிலம், நீர், காற்று ஆகியவற்றை நம் மூதாதையர் நமக்கு எப்படி விட்டுச் சென்றார்களோ அதேபோல் அடுத்த தலைமுறைக்கு நாமும் விட்டுச் செல்வோம். ஒகேனக்கல் காவிரியாற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் உள்ள மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

நேரில் நான் ஆய்வுக்கு சென்றபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு பழுது தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் அத்தியாவசிய தேவை என்பதால் இது தொடர்பான கட்டமைப்பில் பழுது ஏற்படாத வகையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். பழுதுகள் ஏற்படும்போது விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் விநியோக பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

பின்னர், ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன் இருவரும் பொதுக் குழு பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி பாரிமோகன், பாமக நிர்வாகிகள் அரசாங்கம், சாந்தமூர்த்தி, செல்வம், பசுமைத் தாயகம் நிர்வாகிகள் சதீஷ்குமார், அப்பாமணி, தங்கதுரை, கன்னியப்பன், முத்துக்குமார், பழனிவேல், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்: முன்னதாக, ஆடி 1 மற்றும் ஆடி 18 ஆகிய விழாக்களை தமிழர்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவர். எனவே, இவ்விழாக்களின்போது பொதுமக்கள் நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும். மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் இவ்விழாக்களின்போது நீராட உதவும் வகையில் கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த சில வாரங்களாக விநாடிக்கு 1,000 கன அடி என்ற நிலைக்கும் கீழாகவே நீர்வரத்து இருந்து வருகிறது. எனவே, விழா நாட்களில் பொதுமக்கள் நிம்மதியாக நீராட வசதியாக காவிரியாற்றில் தண்ணீர் வரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.மணி கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x