Published : 22 Jul 2014 03:15 PM
Last Updated : 22 Jul 2014 03:15 PM
நீதிபதி நியமனத்தில் தலையீடு இருந்ததாக முன்னாள் நீதிபதி கட்ஜு தெரிவித்த புகார் குறித்து சட்ட அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நீதிபதி நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வெளியிட்ட கருத்துகள் குறித்து மத்திய சட்ட அமைச்சரின் விளக்கம் தேவை அளிக்க வேண்டும் என்றும், நிர்பந்தம் கொடுத்த திமுக அமைச்சரின் பெயரை அவையில் வெளியிட வேண்டும் என்றும் அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
திமுக எம்பி-க்கள் அப்போதைய சட்ட அமைச்சர் பரத்வாஜை சந்தித்துப் பேசியதை பரத்வாஜே ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால், நீதித்துறையில் திமுகவின் தலையீடு இருந்திருப்பது உறுதியாக தெரிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனை அடுத்து அவையில் அதிமுக எம்.பி.க்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகத்தின் பொறுப்பிலிருந்து, எழுத்து மூலமாக அளித்த பதிலில், 'இந்த விவகாரம் தொடர்பான நீதிபதி தற்போது பதவியிலும் இல்லை, ஒருவர் உயிரோடும் இல்லை. ஆகையால் இந்த விவகாரம் குறித்து அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது சாத்தியமானது இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.