Published : 11 Jul 2023 05:05 AM
Last Updated : 11 Jul 2023 05:05 AM

அவுரங்கசீப் நூலின் இரண்டாம் பாகத்தை இந்திரா பார்த்தசாரதி எழுத வேண்டும் - முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் வேண்டுகோள்

பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவுரங்கசீப் என்ற நாடக நூலின் இரண்டாம் பதிப்பை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழக இணை இயக்குநர் டி.எஸ்.சரவணன் வெளியிட, இந்திரா பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். உடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், எழுத்தாளர் பி.கே.கிருஷ்ணன், அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சாந்தி லட்சுமி உள்ளிட்டோர்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: அவுரங்கசீப் நூலின் இரண்டாம் பாகத்தை இந்திரா பார்த்தசாரதி எழுத வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ராமானுஜர் மற்றும் அவுரங்கசீப் ஆகிய 2 நாடக நூல்களை பிரபலஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார். இவற்றை முன்னாள் பேராசிரியர் டி.ராமன்ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ராமானுஜர் நூலை மொழிபெயர்க்கும் பணியில் முன்னாள் பேராசிரியை சி.டி.இந்திராவும் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த நூல்களில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டு இரண்டாம் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திரா பார்த்தசாரதியின் 94-வது பிறந்தநாளான நேற்று,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் - ஜானகி பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டன, இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் பங்கேற்று ராமானுஜர் நூலைவெளியிட தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பெற்றுக்கொண்டார். அவுரங்கசீப் நூலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக்கழக இணை இயக்குநர் டி.எஸ்.சரவணன் வெளியிட, அதை இந்திரா பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் பேசியது: ராமானுஜர் காலகட்டத்துக்கும், அவுரங்கசீப் காலகட்டத்துக்கும் சுமார் 600 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. ஆனால் இந்த வெவ்வேறு காலகட்ட நிகழ்வுகள் குறித்த நூலை தனது 94-வது பிறந்தநாளில் இந்திரா பார்த்தசாரதி ஒன்றாக வெளியிட்டிருக்கிறார். அன்றைய காலகட்ட நிகழ்வுகள் சம காலத்துக்கும் பொருந்தும் என்றகாரணத்தாலேயே இவ்விரு நூல்களையும் ஒன்றாக இன்று வெளியிடப்பட்டுள்ளன என கருதுகிறேன். இவ்விரு நூல்களும் மத நல்லிணக்கம் என்ற ஒற்றை புள்ளியில் இணைகின்றன.

அவுரங்கசீப் நூலில், ஒரே நாடு, ஒரே மாதம், ஒரே மொழி என்று அவர் கனவு கண்ட நிலையில், அவருடைய இறுதி காலம்தனிமையைத் தந்து, துயரத்தில் ஆழ்த்தியது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

உலகிலேயே பெரிய கல்வெட்டு தஞ்சை பெரிய கோயிலில்தான் உள்ளது. அது மராட்டிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. மராட்டிய ஆளுகையில் இருந்தபோது இந்த கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் மராட்டியர்களுக்கும், அவுரங்கசீப் அரசுக்கும் இடையே நடைபெற்ற போர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மராட்டிய அரசர் சிவாஜியின் பேரனை அவுரங்கசீப் வளர்த்துள்ளார். இது மதநல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதுதொடர்பாக அவுரங்கசீப் நூலின் இரண்டாம் பாகத்தை இந்திரா பார்த்தசாரதி எழுத வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பி.கே.கிருஷ்ணன், அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சாந்தி லட்சுமி கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x