

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறையில் 12 பேர் பலி: மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களில் மாலை வரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகளில் தலா 2 தொண்டர்கள், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத், கூச்பெஹார், கிழக்கு புர்த்வான், மால்டா, 24 சவுத் பர்கானாஸ் போன்ற பகுதிகளில் இந்த உயிர்ப் பலி சம்பவங்கள் நடந்துள்ளன.
"தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியும் இணைந்து எல்லா முடிவுகளையும் எடுக்கும்போது திரிணமூல் கட்சியினர் இப்படித்தான் பூத்களை கைப்பற்றுவார்கள், வாக்குப் பெட்டிகளை தூக்கிச் செல்வார்கள். இது மக்களுக்கான தேர்தல் என்று நிச்சயமாகக் கூற முடியாது" என்று பாஜக சாடியுள்ளது.
அதேவேளையில், “கூடுதல் மத்தியப் படைகளைக் கோரியிருந்தோம். ஆனால், அவர்கள் வந்தபாடில்ல. வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு எதிர்க்கட்சிகளின், குறிப்பாக பாஜகவின் சதியே காரணம்” என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி அறிவுரை: மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அன்றிரவே முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுத, பரபரப்பு அடங்கியது.
இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தியாக தெரிகிறது.
தமிழகத்தில் ஜூலை 10 முதல் பத்திரப் பதிவு சேவைக் கட்டணம் அதிகரிப்பு: தமிழகத்தில் பத்திரப் பதிவு சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், இது ஜூலை 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
எடுத்துகாட்டாக, ரசீது ஆவணத்துக்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும், அதிகபட்ச முத்திரைத் தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000 எனவும் மாற்றி அமைக்கப்படுகிறது.
தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.1000 எனவும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் ராஜினாமா: வெளிநாடுகளில் இருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற ஆளும் கூட்டணி அரசு முயன்ற நிலையில், மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 3-வது வாரம் முதல் சிறப்பு முகாம்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை பெறுவதற்கு வரும் ஜூலை 3-வது வாரம் முதல் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் முகாம்கள் நடைபெறும் என தெரிகிறது.
மகளிர் உரிமைத் தொகை நிபந்தனைகள்: அண்ணாமலை எதிர்ப்பு: ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, திமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்து இருக்கலாம். உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர தமிழக மக்களுக்கு அல்ல. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனிடையே, வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
டிஐஜி விஜயகுமார் மரணம் | சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: இபிஎஸ்: டிஐஜி விஜயகுமாரின் இறப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ம.பி.யில் பாதிக்கப்பட்ட இளைஞரின் கோரிக்கை: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட தஸ்மத் ராவத், தன் மீது சிறுநீர் கழித்த நபர் தனது தவற்றை உணர்ந்துவிட்டதால் அவரை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், “அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட். அதனால் அவரை விடுவிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவி நிறத்துக்கு மாறும் ‘வந்தே பாரத்’ ரயில்!: வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தால் ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகக் கோப்பை - முகமது கைஃப் நம்பிக்கை: எதிர்வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரை வென்று கொடுக்கும் திறன் படைத்த வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.