தமிழகத்தில் பத்திரப் பதிவு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஜூலை 10 முதல் அமல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: செட்டில்மென்ட் உள்ளிட்டவற்றுக்கான பதிவுக் கட்டணம் ரூ.4000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த பத்திரப் பதிவு சேவை கட்டண உயர்வு ஜூலை 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பதிவுத் துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத் துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப் பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துகாட்டாக, ரசீது ஆவணத்துக்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும், அதிகபட்ச முத்திரைத் தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000 எனவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.1000 எனவும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in