Published : 08 Jul 2023 04:12 PM
Last Updated : 08 Jul 2023 04:12 PM
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட தஸ்மத் ராவத், தன் மீது சிறுநீர் கழித்த நபர் தனது தவற்றை உணர்ந்துவிட்டதால் அவரை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்ததற்காக ப்ரவேஷ் சுக்லா என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அந்த இளைஞரை நேரில் வரவழைத்து அவருக்குப் பாத பூஜை செய்து விநாயகர் சிலை வழங்கினார். மேலும், அம்மாநில அரசு சார்பில் அவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும், வீட்டைப் புனரமைக்க ரூ.1.5 லட்சம் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட தஸ்மத் ராவத், தன் மீது சிறுநீர் கழித்த நபர் தனது தவற்றை உணர்ந்துவிட்டதால் அவரை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "பிரவேஷ் சுக்லா ஒரு தவறை செய்துவிட்டார். நடந்தது நடந்துவிட்டது. இப்போது அவர் தன் தவற்றை உணர்ந்துவிட்டார். அவரை விடுவிக்க வேண்டும். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட். அதனால் அவரை விடுவிக்க வேண்டும்.
அதேவேளையில், அரசாங்கம் ஒரு பிராயச்சித்தமாக எங்கள் கிராமத்துக்கு நல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறேன். மத்தியப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் என்னுடைய கோரிக்கை நியாயமானது" என்று கூறியுள்ளார்.
மன்னிப்பு நாடகம்: முன்னதாக, மத்தியப் பிரதேச முதல்வர் தஸ்மத்தின் பாதங்களைக் கழுவிய நிகழ்வை அம்மாநில முன்னாள் முதலரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் விமர்சித்திருந்தார். இது குறித்து அவர், "பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த பழங்குடியினத்துக்குமான அவமதிப்பு. வெறும் பாதங்களைக் கழுவி அதனை தீர்த்துவிட முடியாது. பாஜகவின் கொள்கைகள் எல்லாமே பழங்குடிகளுக்கு எதிரானதாக உள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT