Published : 26 Jan 2014 10:12 AM
Last Updated : 26 Jan 2014 10:12 AM

தே.மு.தி.க, பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது: பா.ஜ.க பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தகவல்

தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவ தாக பா.ஜ.க. தேசியப் பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்துக்கு முரளிதர் ராவ், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணே சன், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சனிக்கிழமை சென்றனர். அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளை அவர்கள் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முரளிதர் ராவ் கூறியதாவது:

இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க வேண்டிய, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டிய அவசரம் உருவாகியுள்ளது. அத்தகைய மாற்றத்தை நரேந்திர மோடி தலைமையில் மட்டுமே ஏற்படுத்த முடியும். கடந்த 10 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் அரசால் தர முடியாத மிகச் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை குஜராத்தில் நரேந்திர மோடி வழங்கி வருகிறார். அதே போன்ற நிர்வாகத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்துவதற்காக தற்போது அவர் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட் டுள்ளார்.

ஆனால் தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தற்போதைய சூழலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும். அதில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

இந்நிலையில் பா.ஜ.க. அணியில் சேரப் போவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதலில் அறிவித்துள்ளார். வைகோவை பா.ஜ.க. மிகவும் மதிக்கிறது. அவரது தேர்தல் பிரசாரம் மோடியின் வெற்றிக்கு பெரும் துணையாக இருக்கும். தமிழ்நாட்டில் தே.மு.தி.க., பா.ம.க. போன்ற பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நல்ல முடிவு விரைவில் ஏற்படும்.

இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே தனியாக 240 தொகுதிகள் வரை வெற்றி பெறும். ஆகவே, நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமைவது உறுதி. பிப்ரவரி 8-ம் தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் சென்னை வண்டலூரில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எனக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்வாறு வைகோ கூறினார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், வண்டலூரில் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பது தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x