மகளிர் உரிமைத் தொகை தகுதிகள் முதல் டிஐஜி விஜயகுமார் தற்கொலை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 7, 2023

மகளிர் உரிமைத் தொகை தகுதிகள் முதல் டிஐஜி விஜயகுமார் தற்கொலை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 7, 2023
Updated on
3 min read

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி?: குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை பெற, ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்த கடையில் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்தக் கடையில் விண்ணப்பிக்க வேண்டும்; பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது; பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது; ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது; சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது; ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது; 3,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப் படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு காலை 6.50 மணிக்கு தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தனது பாதுகாவலர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்தபோது டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இந்தத் தற்கொலைக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்சினையோ காரணம் இல்லை என்றும், மருத்துவக் காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு நேரடி ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் விஜயகுமார் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றினார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

“குஜராத் மண்ணில் எந்த ஒரு நீதியையும் எதிர்பார்க்கவில்லை”: ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக கே.எஸ்.அழகிரி கூறும்போது, “குஜராத் மண்ணில் எந்த ஒரு நீதியையும், ராகுல் காந்தியும் காங்கிரஸும் எதிர்பார்க்கவில்லை” என்று ஆவேசமாக கூறினார்.

“இது ஜனநாயகப் படுகொலை” - காங்கிரஸ் கருத்து: ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த வழக்கை மேலும் தொடர்வதற்கான உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், “இது ஜனநாயக படுகொலை. இன்னும் ஒட்டுமொத்த நாடும் எதிர்க்கட்சிகளும் ராகுலின் பின்னால் நிற்கின்றன” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி: கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக் கழக மானியக் குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது.

“சத்தீஸ்கர் வளர்ச்சிக்கு தடைச் சுவராக காங்கிரஸ்!” - பிரதமர் மோடி: "சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்கு முன்னால் பனைமரம் போன்ற ஒரு தடைச் சுவர் உள்ளது. உங்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியே அந்தத் தடைச் சுவர்" என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் ரூ.7,600 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். ராய்பூரில் நடந்த விஜய் சங்கல்ப் பேரணியில் உரையற்றிய பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.

ராகுல் காந்தி தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர் நீதிமன்றம்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் கடும் வறட்சி: கர்நாடகாவில் வழக்கத்தைவிட மழை பொழிவின் அளவு 38 சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை பொழியாததால் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறப்பதிலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.10.

ஒரே வாரத்தில் 3-வது முறை உச்சமடைந்த சராசரி வெப்பநிலை: உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் நாள் 17.01 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் பதிவானது. அடுத்து ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் என்று புதிய உச்சத்துடன் பதிவானதாக அமெரிக்காவின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே மெகா விளையாட்டு நகரம்: சென்னை அருகே மெகா விளையாட்டு நகரம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் குறித்த அறிக்கையை சிஎம்டிஏ அதிகாரிகள், விளையாட்டுத் துறையிடம் வழங்கியுள்ளனர். அதன்படி செம்மஞ்சேரி, குந்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய 3 இடங்களில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in