Published : 07 Jul 2023 05:20 PM
Last Updated : 07 Jul 2023 05:20 PM

ராகுலும் காங்கிரஸும் குஜராத் மண்ணில் நீதியை எதிர்பார்க்கவில்லை: கைதுக்கு முன் கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

சென்னை: "கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதற்காக, குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கு ஒரு மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பளித்த பிறகு, அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. எனவே, குஜராத் மண்ணில் எந்த ஒரு நீதியையும், ராகுல் காந்தியும் காங்கிரஸும் எதிர்பார்க்கவில்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தலைவர் ராகுல் காந்தியின் வழக்கில், குஜராத் மண்ணில் எங்களுக்கு நீதி கிடைக்காது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். குஜராத்தில் திட்டமிட்டு அவர்கள் இந்த வழக்கை நடத்துகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதற்காக, குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கு ஒரு மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பளித்த பிறகு, அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. எனவே, குஜராத் மண்ணில் எந்த ஒரு நீதியையும், ராகுல் காந்தியும் காங்கிரஸும் எதிர்பார்க்கவில்லை.

ராகுல் காந்தி ஒரு போராளி. புரட்சியாளர், தன்னுடைய கருத்துகளில் உறுதியாக நிற்கக்கூடியவர். தான் என்ன கூறினாரோ, அந்த கருத்தில் அவர் உறுதியாக அவர் நிற்பார். மகாத்மா காந்தியின் மறு உருவமாக இந்திய அரசியலில் அவர் வந்திருக்கிறார். நேர்மையும், லட்சியமும் கொண்ட இளைஞர் அவர். இந்தியாவில் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடந்து ஒரு உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

பதவியைவிட, ஒரு சிறந்த வாழ்க்கை முறை வேண்டும். சிறந்த சமூகம் அமைய வேண்டும். இந்தியா ஒரு வல்லரசாக மாற வேண்டும் என கருதுகிறவர். எனவே, மக்கள் மன்றத்தில் அவரை முடக்க முடியாது என்பதற்காக, மக்கள் மத்தியில் அவரை வெல்ல முடியாது என்பதற்காக, மோடி அரசு பின்புறமாக வந்து அவரை முடக்கப் பார்க்கின்றனர்.

தேர்தலில் அவர் நிற்காமல் இருப்பதற்கான முயற்சிகளை செய்கிறார்கள்.பிரதமர் மோடி உண்மையிலேயே ஒரு சிறந்த அரசியல் தலைவராக இருந்தால், களத்தில் அவரை சந்தியுங்கள். மக்கள் மன்றத்தில் அவரை சந்தியுங்கள். தேர்தலில் அவரை சந்தியுங்கள். கர்நாடகத்தில் முயற்சித்து பார்த்தீர்கள், ஆனால் உங்களுக்கு தோல்வி வந்தது. வடமாநிலங்களிலும் உங்களுக்கு தோல்விதான் வரும். மக்கள் உண்மையை புரிந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் மோடியால், இந்த 9 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் கொடுக்க முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருவாயை உருவாக்குவதாக கூறினார், அதுவும் நடக்கவில்லை. புதிய ரயில் திட்டங்களை அவரால் கொண்டுவர முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்தது. ரூ.500, ரூ.1000 செல்லாது என்று சொல்லி, ரூ.2000-ஐ கொண்டுவந்தார். இப்போது ரூ.2000மும் செல்லாமல் போய்விட்டது. தொழில் துறை உட்பட எந்த துறையிலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

இதனால், சாதி, மதங்களை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மக்களை ரத்தம் சிந்த வைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் ராகுல் காந்தி தடையாக இருக்கிறார் என்பதற்காக, அவர் மீது தாக்குதலை தொடுக்கின்றனர். ராகுல் ஒரு வெற்றிவீரர். மக்கள் மன்றத்தில் அவர்தான் வெற்றிபெறுவார்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. | விரிவாக வாசிக்க > அவதூறு வழக்கு | ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x