Published : 06 Jul 2023 03:30 PM
Last Updated : 06 Jul 2023 03:30 PM

ஐ.டி சோதனை எதிரொலி: செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பதிவுத் துறை விளக்கம் 

கோப்புப் படம்

சென்னை: சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு இல்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவ்விரு சார் பதிவாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

செங்குன்றம் மற்றும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை தொடர்பாக பதிவுத் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருமான வரி சட்டம் பிரிவு 285 BA மற்றும் விதி 114 E ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித் துறை இணையதளத்தில் மேலேற்றம் செய்யப்படுகிறது. இது படிவம் 61A என அழைக்கப் படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இவ்விவரங்கள் தவறாமல் மேலேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட விவரங்கள் வருடந்தோறும் ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த பதிவு அலுவலரால் வருமான வரித் துறை இணையதளத்தில் மேலேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்நிதியாண்டு முடிவடைந்த இரண்டு மாதத்துக்குள் எந்தெந்த சார் பதிவாளர்கள் இந்த அறிக்கையை மேலேற்றம் செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத் துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித் துறையால் பின்பற்றப் படாதநிலையில், மேலேற்றம் செய்யப்படாத விவரங்கள் குறித்து அவ்வப்போது வருமான வரித் துறையால் நினைவூட்டுகள் பதிவுத் துறை தலைவருக்கு அனுப்பப்படுவதும், அதன்மீது பதிவுத் துறை தலைவர் உரிய மேல் நடவடிக்கை எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது.

வருடாந்திர அறிக்கை மட்டுமல்லாது ரூ.30 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள், ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள் போன்றவற்றின் விவரங்களும் வருமான வரித் துறையினரால் பதிவுத்துறை தலைவரிடம் அவ்வப்போது கோரப்படும். இந்த விவரங்கள் மையக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன்மூலம் சார் பதிவாளர் மேலேற்றம் செய்த படிவம் 61A-வில் ஏதேனும் விடுதல்கள் உள்ளதா என்ற விவரம் வருமான வரித் துறையால் சரிபார்க்கப்படும்.

இவ்வாறு மேலேற்றம் செய்ய தேவையான தகவல்களை ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதரர்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில், விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து PAN எண் பெறப்படுகிறது. PAN எண் இல்லாதவர்கள் வருமான வரிச் சட்டத்தின்படி படிவம் 60 அளிக்கவேண்டும். இவ்விவரமும் மென்பொருள் வழியே சேகரிக்கப்படுகிறது.

மேலும், ரூ 30 லட்சத்திற்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார்எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் வழி சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் அந்நிதியாண்டு முடிவடைந்ததும் வருமான வரித் துறை இணையதளத்தில் சார் பதிவாளரால் மேலேற்றம் செய்யப்படும்.

மேலும், பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அதனை நிகழ்நேரத்தில் (Real Time), UIDAI ஆதார் தரவுடன் ஸ்டார் 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் PAN எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித் துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத்துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

04.07.2023 அன்று திருச்சி பதிவு மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டம் ரெட்ஹில்ஸ் சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு வருமான வரித் துறையினர் நேரில் வந்தனர். 2017-2018-ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் அவர்களால் கோரபட்டதற்கு இணங்க வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித் துறையினரால் அந்தந்த சார் பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் விரைவில் வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். மேலும், உரிய காலத்துக்குள் இவ்விவரங்களை மேலேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார் பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார் பதிவாளர்களும் 61A விவரங்களை வருமான வரித் துறையின் இணையதளத்தில் உரிய காலத்துக்குள் மேலேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு இல்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் விவரம்: செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி பத்திரப் பதிவுகளுக்கு கணக்கு இல்லை - வருமான வரித் துறை தகவல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x