Published : 06 Jul 2023 04:45 AM
Last Updated : 06 Jul 2023 04:45 AM

செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி பத்திரப் பதிவுகளுக்கு கணக்கு இல்லை - வருமான வரித் துறை தகவல்

சென்னை/ திருச்சி: சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு இல்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பான்அட்டை இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், இதனால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் வருமான வரித் துறைக்குபுகார் சென்றது.

இதையடுத்து, சந்தேகத்துக்குரிய சார் பதிவாளர் அலுவலகங்களை கண்டறிந்து, அங்கு வருமான வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி, சென்னை அடுத்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் திருச்சி மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல்கட்டமாக வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 4-ம் தேதி சோதனை நடத்தினர்.

செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 3 கார்களில் வந்த10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், அங்கு பதிவு செய்யப்பட்ட நிலங்கள் தொடர்பான விவரங்களின் கோப்புகள், பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ச்சியாக 17 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதேபோல, திருச்சி உறையூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையிலும், பல்வேறு முக்கியஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித் துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ரூ.5 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பத்திரப் பதிவுகள் குறித்த விவரங்களை திரட்டி உள்ளோம்.

அதில், இதுவரை ஆய்வு செய்த பத்திரப் பதிவு ஆவணங்களில் செங்குன்றத்தில் ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பில் பான் அட்டை இணைக்கப்படாமல் பத்திரப் பதிவுகள் நடந்திருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இந்த ஆவணங்களை ஆய்வு செய்து வருவதால், இந்த தொகை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிக அளவில் ‘படிவம் 60’: இதுகுறித்து சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் கூறியபோது, ‘‘ரூ.5 லட்சத்துக்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பத்திரப் பதிவின்போது, வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவர் இருவரும் பான் எண்ணை குறிப்பிட்டு, அட்டையின் நகலை இணைக்க வேண்டும். பான் எண் இல்லாதவர்கள் வருமான வரித் துறையின் படிவம் 60-ஐ பூர்த்தி செய்து சுய உறுதிமொழியை அளிக்க வேண்டும்.

பத்திரப் பதிவின்போது பான் எண் அளிக்கப்பட்டிருந்தால், அது நேரடியாக வருமான வரித் துறையின் கவனத்துக்கு உடனடியாக சென்று விடும். மாறாக, படிவம் 60 அளித்திருந்தால், அது வருமான வரித் துறைக்கு செல்லாது.

சார் பதிவாளர் அலுவலகங்களை பொருத்தவரையில், ஒன்று பான் அட்டை அல்லது படிவம் 60 இணைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.

குறிப்பாக, உறையூர் மற்றும் செங்குன்றம் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் அதிக அளவில் படிவம்60-ஐ அளித்து பத்திரப் பதிவுகள் நடந்திருப்பதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x