Published : 05 Jul 2023 05:56 AM
Last Updated : 05 Jul 2023 05:56 AM

கல்குவாரிகள் போராட்டத்துக்கு அரசு தீர்வு காண வேண்டும் - கட்டிட தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நடந்த ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அடுத்த படம், கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள்

தருமபுரி: கட்டிட தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் வகையிலான கல்குவாரிகள் போராட்டத்துக்கு அரசு தீர்வு காண வேண்டும் என தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நடந்த ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநிலக் குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 3) தொடங்கி 2 நாட்கள் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் முனுசாமி, மாநில பொருளாளர் முருகன், செயலாளர்கள் பாலன் சேது, சங்கர், சின்னசாமி, துரைசாமி, ஸ்ரீநந்தினி, தில்லைவனம், வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராஜன், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுச் செயலாளர் செல்வராஜ் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். கூட்ட முடிவில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றி பொதுக்குழுவை நிறைவு செய்து வைத்தார்.

கூட்டத்தில், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுமான பெண் தொழிலாளர்கள் ஓய்வூதிய வயதை 55 என கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முடிவு செய்ததை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதேபோல் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால பலன்கள் வழங்குவதை போல பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கும் ஆறு மாத சம்பளமும் ,பேறுகால விடுப்பும் வழங்கிட வேண்டும்.

மேலும், வீடு இல்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் அல்லது வீடு வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற மேற்கண்ட 3 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 11-ம் தேதி தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல், மத்திய அரசு திருத்தப்பட்ட தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். தொழிலாளர் பாதுகாப்புகளை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறவுள்ள பெருந்திரள் தொழிலாளர் அமர்வு போராட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் கட்டிட தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிப்படையும். எனவே, குவாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்தி கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மாதேஸ்வரன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் மணி, தலைவர் குழந்தைவேல், பொருளாளர் விஜயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x