Published : 04 Jul 2023 05:45 AM
Last Updated : 04 Jul 2023 05:45 AM

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, இன்று டெல்லி செல்லும் துரைமுருகன், மத்திய அமைச்சரை சந்தித்து, அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்த உள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட முடிவெடுத்து அதற்கான முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் கர்நாடகாவில் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் சிவகுமார், அணை கட்டியே தீருவோம் என்றார். மேலும், ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆனால், தமிழக நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன், அணை கட்ட விடமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தஅவர், இதுதொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தப்போவதாக தெரிவித்தார்.

இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில், மேகேதாட்டு விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதற்கிடையே, காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் வழங்குவது மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆண்டும் ஜுன் 12-ல் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்தார். தொடர்ந்து தேவைக்கேற்ப நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,குறுவை சாகுபடியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ரூ.61.09 கோடியிலான குறுவை தொகுப்பு திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

டெல்டா பாசன விவசாயிகளும் சாகுபடி வேலைகளை முழுவீச்சாக செய்து வருகின்றனர் விவசாயம் செய்வதற்கு தேவையான நீர் அனைவருக்கும் சீராக கிடைப்பதற்கு ஏதுவாக, கால்வாய்கள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை, தமிழக உறுப்பினரும், நீர்வளத் துறை செயலருமான சந்தீப் சக்சேனா கடந்த ஜூன் 16-ம் தேதி வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் நீர் குறைவாக வழங்கப்பட்டது குறித்தும், கடந்த ஜூன் 30-ம்தேதி நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு நீர்வளத் துறை செயலர் கடந்த ஜூலை 3-ம்தேதி எழுதிய கடிதத்தில் குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், ஜூலை மாத அட்டவணைப்படி கர்நாடகா நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு, விவசாயிகளின் பாசனத்துக்கேற்ப நீர் அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

அரசியல் நிர்ப்பந்தமோ அல்லது வேறு காரணத்தாலோ, கர்நாடக அரசு அவ்வப்போது மேகேதாட்டு பிரச்சினையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. எவ்வாறு இருந்தாலும் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவி ஏற்றதும் மேகேதாட்டு அணை குறித்து பேசியதற்கு, உடனே நான் மறுப்பு தெரிவித்தேன்.

கடந்த ஜூன் 30-ம் தேதி கர்நாடக துணை முதல்வர், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தபோது, மேகேதாட்டு திட்டத்துக்கான அனுமதி குறித்து பேசியதாக செய்தி வெளியானது. இது வருந்தத்தக்கது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகேதாட்டு திட்டம்உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. மேகேதாட்டு திட்டத்துக்கு மத்தியஅரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது என ஏற்கெனவே பிரதமரை கடந்த 2021 ஜூன் 17, கடந்த 2022 மார்ச் 31 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் சந்தித்தபோது, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நானும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தபோதெல்லாம் இதை வலியுறுத்தியுள்ளேன். அவரும்தமிழக அனுமதியின்றி மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.

முயற்சிகளை முறியடிப்போம்: இதற்கிடையே, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன்வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும்.

தமிழக உரிமைகளை காக்கவும், விவசாயிகள் நலன் கருதியும், இந்த ஆண்டு விவசாயத்துக்கு தடையின்றி நீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசுஎடுக்கும். மேகேதாட்டு அணை பிரச்சினை குறித்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நாளை சந்தித்து, மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்துகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x