Published : 04 Jul 2023 06:59 AM
Last Updated : 04 Jul 2023 06:59 AM

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு பலூன் விடுவோம் - அண்ணாமலை

சென்னை: பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக `கோ பேக் ஸ்டாலின்’ என்ற பதாகைகளுடன், கருப்பு பலூனும் பறக்க விடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான நதி நீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்து வருகிறது. காவிரி பிரச்சினையில் கர்நாடக பாஜக எந்த அரசிலும் செய்யவில்லை. பலஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு இடையே காவிரிப் பிரச்சினை நீடிக்கிறது. அதற்கு நிரந்தரத் தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தார்.

மேகேதாட்டுவில் அணை கட்டும் பிரச்சினையை கர்நாடகா காங்கிரஸ்தான் கிளப்பியது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என உறுதியளித்து, அதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தது.

தற்போது காவிரியில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்திக்கும்.

அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால், தன்னை அகில இந்திய அளவிலான தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். ஆனால், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக முதல்வர், துணை முதல்வரைக் கண்டிக்கவோ, காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கவோ முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிக் கூட்டத்துக்கு செல்லலாம். திரும்பி வரும்போது அவரைக் கண்டித்து பாஜக தொண்டர்கள் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற பதாகைகளுடன் வீட்டின் முன்பும், வீதியிலும், விமான நிலையத்துக்கு வெளியிலும் நிற்போம். மேலும், ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விடுவோம்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள்என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்? நாங்கள் ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனைக் கொண்டு, தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது என்று மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. காவிரி பிரச்சினை போலவே, முல்லை பெரியாறு அணைகளிலும் நமது உரிமைகள் விட்டுக் கொடுக் கப்பட்டு வருகின்றன.

பாஜக ஆட்சி அமைக்கும் மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினையே இல்லை. இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருந்தால், பிரச்சினையை பேசி முடித்துக் கொள்வார்கள். எனவே, பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x