Last Updated : 09 Jul, 2014 12:44 PM

 

Published : 09 Jul 2014 12:44 PM
Last Updated : 09 Jul 2014 12:44 PM

சகதியாக மாறி வரும் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளம்- காணாமல் போகும் நிலையில் 14 தீர்த்த குளங்கள்: குறையும் நிலத்தடி நீர்மட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக் கோயில். ரிக்,யசூர்,சாம மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களால் உருவான மலை மீது இக்கோயில் அமைந்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த மலையைச் சுற்றிலும் சிவபெரு மான் முனிவர்கள் மற்றும் தேவர் களுக்கு அருள் பாலித்து முக்தி அளிப்பதற்காகக் காட்சியளித்த போது அகத்தீய குளம், மூலிகை குளம், அக்னி குளம், லட்சுமி தீர்த்தம், சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 14 தீர்த்தக்குளங்கள் அமைந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன.

இதில் சங்கு தீர்த்தக்குளம் வெகுபிரசித்தி பெற்றது. மலை கோயிலின் தெற்கே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சங்கு தீர்த்தக்குளத்தில் மார்க்கண்டேய முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்தபோது வழிபாடு செய்ய இந்தக் குளத்தில் சங்கு பிறந்ததாக ஐதிகம். 12 ஆண்டு களுக்கு ஒரு முறை குளத்தில் இன்றும் இயற்கையாகச் சங்கு பிறக்கிறதாம். நன்னீரில் சங்கு பிறப்பது அதிசயம். அதனாலேயே, இந்தக் குளத்துக்குச் சங்கு தீர்த்தக் குளம் எனப் பெயர் வந்ததாகப் பக்தர்கள் பரவசத்துடன் கூறு கின்றனர்.

வேதமலையின் மீது பல அரியவகை மூலிகைகள் உள்ளன. மழை காலத்தில் மலையில் இருந்து வரும் நீர், கால்வாய்கள் மூலம் குளத்தில் சேகரமாகிறது. முன்னதாக இந்த நீரை வடிதொட்டி அமைத்து, தெளிந்த நீராகக் குளத்தில் கலக்க விடப்படுகிறது. இக்குளத்தில் நீராடி மலையை வலம் வந்தால், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பவுர்ணமி தோறும் கிரி வலம் செல்லக் கூட்டம் அலைமோதும்.

இத்தகைய பிரசித்தி பெற்ற சங்கு தீர்த்தக்குளம், போதிய பராமரிப்பு இல்லாமல் சகதி குள மாக மாறிவிட்டது. சுற்றிலும் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்குமிட மாகவும் திறந்தவெளி கழிப்பிட மாகவும் மாறியுள்ளது.

இதுகுறித்து, திருக்கழுக் குன்றத்தை சேர்ந்த பக்தர் துரை கூறுகையில், “பல நூறு ஆண்டு களாக, இக்குளத்தில் உள்ள நீரை எடுத்து வேதகிரீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்தனர். மழைக்காலங்களில் மலையில் இருந்து வடியும் மழைநீர் சங்கு தீர்த்தக்குளத்துக்குச் சென்றடை யும் வகையில் வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் சீராகக் குளத்தில் கலந்து வந்ததால், குளம் வற் றாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், வரத்து கால்வாய் களைப் பல்வேறு பகுதியில் ஆக்கிரமித்துக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், குளத் துக்கு வரும் மழைநீர் தடைபட்டுள்ளது. இதனால் குளம் வறண்டு வருகிறது. மேலும் குப்பை மற்றும் மாமிசக் கழிவுகளை மலையை ஒட்டி கொட்டுவதால் மழைக்காலங்களில் இவை அடித்துச்செல்லப்படுவதால் சங்கு தீர்த்தக்குளத்தின் புனி தம் கெட்டுப்போகிறது. அருகில் இருக்கும் அரசு மருத்துவ மனையின் உள்நோயாளிகளின் துணிகள் துவைக்கும் இடமாகவும் மாறிவிட்டது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும். துணி துவைப் பதைத் தடுக்கக் காவலர் நியமிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் கூறுகையில், ‘மலையை சுற்றி அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க 14 தீர்த்தக்குளங்கள் காணமல் போய் வருகின்றன. இவற்றை சீரமைத்துச் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக மீண்டும் வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும். இந்தக் குளங்களில் மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பக்தர்களின் புகார்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ சங்கு தீர்த்தக்குளத்தின் வரத்து கால்வாய்களைச் சீரமைக்கப் பெரிய அளிவிலான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வருவாய்த்துறையின் உதவி யோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும். வேதமலையை சுற்றியுள்ள 14 தீர்த்தக்குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் சீரமைக் கப்படும். சங்குக்தீர்த்த குளத்தைத் தூர்வாரினால், சங்கு பிறப்பதில் பாதிப்பு ஏற்படும் என உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கருதுவதால், குளத்தின் தூர் வாரும் பணிகள் குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x